பறந்து செல்லாய்க் கிளியே

பாவகை - இயற்கும்மி

பறந்திடு வாயேன் கிளியே ! அடைந்த
---பழங்கூண்டு மிங்கே மறைந்ததடி
திறந்தது வானம் கிளியே ! வெளியில்
---திசைகளு மெட்டாய் விரிந்ததடி !

பருந்துகள் வந்து உனைப்பிடிக்கு மென்ற
---பயத்தினில் கூண்டையும் கட்டிவைத்தேன் !
வருந்திடுவாய் நீயுந் துயர்படு வாயென்று
---வாசலி லஃதையுந் தொங்கவிட்டேன் !
அருந்திடத் தேனும் அமுதுக் கனிகளும்
---அள்ளியள்ளித் தந்து உனைவளர்த்தேன்
திருந்திவிட்டேன் உன்னைத் திறந்துவிட்டேன் ! கூண்டும்
---திறந்ததடி வானில் பறந்திடடி !

பச்சைக் கிளியே ! பவளமே ! உன்மேலே
---பாசத்திலே கூண்டை அமைத்துவைத்தேன் !
அச்சப்பட் டேனுன்னை யாரேனும் வந்து
---அடித்திடு வாரென்று கூண்டிலிட்டேன்
உச்சியைப் பார்த்து உயர்துநீ சென்றிட
---உண்மையில் நான்தடை யென்றுரைத்தாய்
இச்சம யங்கூண்டு நீங்கியதே ! அந்த
---இமயத்தை நோக்கிப் பறந்திடடி !

கூண்டை யமைத்தவன் நானென்ப தாலென்மேல்
---கோபங்கொண் டாயோ அடிக்கிளியே !
ஆண்டுகள் நானும் அடைத்துவைத் தேனென்று
---ஆத்திரம் வந்தது வோ?கிளியே !
கூண்டினைப் போட்டது உன்னை யடைத்துக்
---கொடுமைகள் செய்திடும் நோக்கிலல்ல
தாண்டிய தேநீ யடைபட்ட காலமும்
---தாவித் திரிந்து பறந்திடடி !

இரும்பினிற் கூண்டை அமைத்திட வில்லை
---இழைத்த மரத்தில்செய் கூண்டுமில்லை
துரும்பெடுத்துப் பின்னி நிதந்தொடுத் துச்செய்த
---தூக்கணாங் கூண்டு இதுவுமில்லை
விரும்பியதால் நெஞ்சம் அரும்பிய தால்செய்த
---விந்தையு டைக்கூண்டு தானிதுவே
அருவியெ னப்பாயும் அன்புடைக் கூண்டு
---அவிழ்ந்ததுவே நீயும் பறந்திடடி !

அன்புடைக் கூண்டினைத் தானமைத் தேனதில்
---அன்பினை மட்டும்நீ காணவில்லை
வன்முறை கண்டாய் வளர்க்கும் எனையொரு
---வஞ்சக னாயெண்ணித் தள்ளிநின்றாய்
என்மனத் தெண்ணம் தனைக்கண்டி லாயடி
---என்றுமுனை நானும் வெறுத்ததில்லை
உன்னின்ப மேயென்றும் என்னின்ப மாமதன்
---உண்மை உணர்ந்துப் பறந்திடடி !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-15, 1:23 pm)
பார்வை : 61

மேலே