பசலை அப்பிய கணங்கள்
இயற்கையின்
பிஞ்சு நிறத்தின் மீது
திகைப்பும், தயக்கமுமாய்
அமர்கிறது
என் கண்கள்.
நீண்ட தூரம்
பயணித்து வந்த
மழையின் பாடல்
இந்தக் கவிதையின்
முதல் வரியைப்
பரிசளித்துவிட்டுச் சென்றது.
பூக்களின் கதவை
முட்டியபடி
வெதுவெதுப்பான
மூச்சுக் காற்றால்
ஆகாயத்தை வரைகிறது
ஒரு சிறு பூச்சி.
பருவத்தின்
மணம் வீசத் துவங்கிய
பூவின் மகரந்தப் பைகள்
பசலையை அப்பியிருந்தன.
எனக்குள் பெருகும்
ஒரு நதியின் கரைகளில்
மிதக்கிறது
கனவின் நிழல் ஒளி.
யாரையும்
வசீகரிக்காத
என் வாழ்வின்
பிழையில் கலங்கியபடி...
சலனத்தோடு அசையும்
ஒற்றை மஞ்சள் நிற ஒளியில்
அமர்ந்திருந்தேன்...
தனிமையோடு தவித்தபடி.