தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்.
உருகிடும் நெஞ்சையும் உதறியே தள்ளிடும்
அருகினில் இருப்பினும் உரக்கவே பேசிடும்
செத்தாலும் முகத்தில் விழிக்க மாட்டேனென
அத்தானாய் இருப்பினும் அதிரடியாய்ப் பேசிடும்!
பெற்றோர் பிள்ளையைப் புறந்தள்ள வைக்கும்
பிள்ளையோ பெற்றொரை எள்ளிடச் செய்யும்
கணவனை மனைவியை புல்லெனச் சொல்லும்
செயலிலே கோபம் சீர்மை கெடுக்கும்
முயலாமல் காணும் முகமொன்று உண்டு
கோடிகள் கொடுத்தும் வாடியே நிற்கும்.
கோபத்தின் பாலினம் ஆணல்ல பெண்ணல்ல
சாபமாய் கொள்வோரின் முகத்தினில் வாழும்.
ஆயினும் அதற்குக் கரங்களே சுத்தியல்
வாயினில் வெளிப்படும் நாவிலோ நெருப்பியல்
பற்களோ இருபுறம் கூர்கொண்ட வாளாம்
சென்னியே பாறையாய் தன்னையே அழிப்பதாய்
தொங்கிடும் புருவமும் பொங்கிடும் பருவமும்
சிங்கமாய் மாறியே சிங்காரம் ஒழித்திடும்
பெருகிடும் கோபம் பெருந்துயர வெள்ளம்.
பேணி வளர்ப்போரை பேரலை அள்ளும்.