காதல் இலக்கணம்

குழப்பமாய் இருந்தாலும்
இலக்கணம் இப்போதெல்லாம்
நன்றாகப்புரிகிறது
உன்னைக்காதலிக்க
ஆரம்பித்த பிறகு...!
செயலைக்குறிக்கும் சொல்
வினைச்சொல்லாமே....
இருந்தாலும் புரியவில்லை..
காதல் என்பது வினைச் சொல்லா ?
அல்லது
காதலித்தல் என்பது வினைச்சொல்லா ?
வயல்வெளி அரங்கத்தில்
ஆயிரக்கணக்கான பயிர்களின்
மத்தியில் முடிவுறாப் பட்டிமன்றம் நடக்கிறது
மூன்றாம் கட்ட அறுவடையும்
முடிந்து போனது..!
முடிவு தெரியாமல் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது பட்டிமன்றம்....!..!
ஒருவேளை காதல் என்பது
கா....த்...த்...த்...த்...திருப்பு
என்று சொல்வது இதனால்தானோ..!
குடும்பச்சூழ்நிலை விதிவிளையாட்டில்
படிக்காமல் போனதில் வருத்தமிருந்தாலும்
இந்த கோயமுத்தூர் குசும்புக்கொன்றும்
குறைச்சலில்லை...
அதுதான் இப்போது படிக்கிறேனே
இலக்கணப்பாடம்...!
எது எப்படியோ....
எனக்கு காதல் என்பது வினைச்சொல்லே...!
.
அது என்னை தவிக்கச் செய்கிறது,,,
தாறுமாறாய் யோசிக்கச் செய்கிறது....
கவிதை பலவற்றை
கண நேரத்தில் கொட்டிச்செல்கிறது
இலக்கணத்தமிழை
ஆழமாய்ச்சென்று ஆராய வைக்கிறது...
முடிவு பெற்ற வினைச்சொல்
வினை முற்றாமே...!
முடிவு பெறா வினைச்சொல்
வினை எச்சமாமே..!
உன் இதயத்தைத் தொட்டுச்சொல்..
என் காதல் முற்றா எச்சமா என்று...!
ஒரு செயல் முடிவுறாமல் தொக்கி நிற்பது
எச்ச வினையாம்..!
அப்படியேதான் என் காதலும்
அந்தரத்தில் தொங்கி நிற்கிறது
உன் பதிலென்ன..?
பெயரைக்கொண்டு முடிந்தால்
பெயரெச்சமாம்.
ஒரு செயலைக் கொண்டு முடிந்தால்
வினையெச்சமாம்..
இங்கே இரண்டுமே எனக்கு
உன் பெயராகிப்போனதால்
குழம்பி நிற்கிறேன் நாற்றுகளோடு பேசியபடி..!
”உம்” என்பது இலக்கணத்தில்
இடைச்சொல்லாமே.....
உன் வாயால் அதைச்சொல்...
அது இடைச்சொல் மட்டுமல்ல
நம் காதலுக்கான சம்மதச்சொல்
என்று சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்...