மழை நீர் சேகரிப்பு --- புதிய குறள்கள்

வணக்கம்,
மழைநீர் சேகரிப்பு என்ற தலைப்பில் பத்து புதிய குறள்கள் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. எனவே தயாரித்து கீழே எழுதியிருக்கிறேன். வள்ளுவரின் செய்யுள் நடையில் எழுத முயன்றிருப்பதால் கடினமான சொற்கள் என்று எனக்கு தோன்றிய சொற்களுக்கு அந்தந்த குறளின் கீழ் பொருள் எழுதியிருக்கிறேன். அனைவரும் புரிந்து கொள்ள வசதியாயிருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு எழுதியிருக்கிறேன். எனது கவிதைத் திறனை மேம்படுத்த குறைகளை சுட்டிக் காட்டுவதை வரவேற்கிறேன்.

மழைநீர் சேகரிப்பு --- புதிய குறள்கள்
1.. விண்நின்று பொய்ப்பினும்* பெய்பொழுதே* சேகரிப்பின்
மண்நின்று காக்கும் மழை.
*விண்நின்று பொய்ப்பினும் = வானம் மழை பெய்யத் தவறினாலும்
பெய்பொழுதே* = மழை பெய்யும்போழுதே

2. செய்பொழுதே* சேமிக்கும் பொருள்போன்றே மழைநீரைப்
பெய்பொழுதே சேமித்தல் தலை*
*செய்பொழுதே = பொருளை ஈட்டும்பொழுதே; *தலை = சிறந்தது.

3. விண்ணின் பெருமகிழ்ச்சி வேறுள?* தன்நீரை
மண் அரணாய்க்* காத்து விடின்.
வேறுள? = வேறும் இருக்கிறதோ என்ன? ; அரணாய்* = வேலியாய்

4. துப்பாய துப்பாக்கும்* மழைநீரைப் பெய்பொழுதே
தப்பாமல் காத்தல் அறிவு.
* துப்பாய துப்பாக்கும் = உண்பதற்குரிய உணவுப் பொருட்களை உண்டாக்கும்

5. மண்தரையின் அளவைப் பொன்போலே காப்பின்
விண்ணவர்க்கும் நீர்வழங்கல் எளிது.

6. கூரை வீடெனினும் பாறை நிலமெனினும்
நிலத்தடி நீர்சேர்த்தல் எளிது.

7. நிலத்தடி நீரும் மாசுறக்* கண்டபின்
புலன்உறைக்கா திருத்தல் அழிவு.
* மாசுற = அசுத்தமடைய

8. நிலம்ஏற்கும்* முறைஅறிந்து சேமிக்கும் மழைநீர்
கலம்செல்லும்* கடலினும் விரிது*
*.நிலம்ஏற்கும் முறை =நிலத்தின் தன்மைக்கேற்ற மழைநீர் சேகரிப்பு முறை
(பலவகை நிலங்கள் உலகில் இருப்பதால் நிலத்தின் தன்மைக்கேற்ப
சேகரிப்பு முறையும் மாறுபடும்)
*கலம் = கப்பல்; விரிது = விரியும் ( அவ்வாறு முறையறிந்து எல்லோரும் ஒத்துழைத்து மழை
நீர் சேகரிக்கும்போது நீரின் அளவு கடல் போல் விரிவடையும்)

9. செயற்கை மழைஆக்கும்* செலவினினும் இயற்கை
மழைகாக்கும் செலவு சிறிது.
*மழைஆக்கும் = மழை உண்டாக்கும்

10. அரசுடன் குடிஇணைந்து* நீர்சேர்ப்பின் வெற்றியின்
முரசை இசைக்கும் மழை.
*அரசுடன் குடிஇணைந்து = அரசுடன் மக்களும் சேர்ந்து ஒத்துழைத்து

எழுதியவர் : ம கைலாஸ் (24-Oct-15, 10:38 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 197

மேலே