இயந்திர இதயம்
இயந்திரம் இதயமாகி விட்டதால்
இதயம் இயந்திரமாகி விட்ட
காலம் இது !!!
வானளாவிய கட்டிடங்கள்
வாகன நெரிசல்
வார இறுதி சொகுசுகள்
வசதி தேடியே வாழ்வு ...
நாசுக்காக நகர்கிறது
நவீன நகர வாழ்க்கை ...!!!
நாவிற்கடியில்
நற்றமிழைப் புதைத்து விட்டு
நா நுனியில் வேற்று மொழி
தேடிப் பிழைக்கிறது
நாகரிகம் !!!
அன்னையாக மாறிவிட்ட
ஆயாக்கள் மத்தியில்
அலுவல்களில் தொலைந்த
அன்னையின் அன்பைத்
தேடுகின்றன குழந்தைகள் !!!
அன்றாட வாழ்வில்
ஆடம்பரம் சேர்க்க
அல்லல் படும் தந்தையிடம்
அரை நொடி சிரிப்பும்
அரிதாகி விட்டது !!!
அன்னை தந்தை அரவணைப்பு
கானல் நீராகி விட்டது
கணிணி மடியில்
கண்மூடுவோர் மத்தியில் !!!
மடியில் கணிணி வைத்து
கொஞ்சிய வேகம் இன்று
மகப்பேறு மருத்துவரிடம்
கெஞ்சும் சோகம் நன்றோ???
முதியோர் இல்லம் வெளியே;
குழந்தைகள் காப்பகம்
வீட்டிலேயே;
இல்லம் இன்னும் வரவில்லை
இவர்களுக்கு மட்டும் !!!
சவ ஊர்வலம் மறைந்து
ஊர்தியில் வலம் வருகின்றன
சவங்கள்...
சுமக்க ஆளின்றி
சுமையாகிப் போன
இவை உண்மையில்
இப்போது தனிப்பிணம் தான் !!!
அமைதியான வாழ்வில்
அடிப்படைத் தேவை மறைந்து
ஆடம்பரத் தேவையே
அடிப்படை ஆகிவிட்டது !!!
புரிதல் எல்லாம்
பிரிதலில் மட்டுமே
நிகழ்கிறது ...
நீதிமன்ற வளாகம்
நிறைகிறது ...
பிரிதல் அன்யோன்யத்தில் !!!
தனக்கோ பிறர்க்கோ
ஒதுக்காத நேரம் ...
வாழ்வியல் நம்மை ஒதுக்க
நாம் ஒதுக்கிய நேரமே !!!
விஞ்ஞானம் தந்த விரைவுகள்
நேரம் குறையவே...
நெஞ்சில் இருக்கும்
ஈரம் குறையவோ???
மழலை மொழியில் கூட
மயங்காத மனம் தேடும் பணம்
மண்ணுக்குள் போகும் வரை
மன அமைதி தருமோ???
உறவுகள் தொலைத்து
வரவுகள் தேடும் வாழ்வில்
உறவாக வருவது
வெறுமை மட்டுமே !!!
- பா.வெ.