புயலே போபோ

நெஞ்சளவு நீரினிலே
-----நேற்றுபிறந்த பிஞ்சொன்று
கெஞ்சிஉணவு கேட்கதடா
-----கல்மனதும் கரையுதடா

நாளைமலரும் மொட்டொன்று
-----நெடியநீரில் நிற்குதடா
நாளையேனும் விடியுமென்று
-----நம்பிநீரில் நனையுதடா

பசியினிலே துடிதுடித்து
-----பார்க்குமெங்கும் நீர்வரத்து
படுத்துறங்க இடமின்றி
-----பாடுபடும் ஜனக்கூட்டம்

சோற்றுக்குக் கையேந்தி
-----சோகத்தை மனமேந்தி
நாற்றெனவே நீர்பெருக்கில்
-----நடுநடுங்கி நிற்குதடா

தன்பசியைப் போக்கிடவே
-----தட்டேந்தி நிற்கவில்லை
அன்னைதந்தை பசிபோக்க
-----அடுத்தவரை நாடுதடா

நெஞ்சமெலாம் குமுறுதடா
-----நீதிமண்ணில் அழிந்ததடா
வஞ்சம்தீர்த்து விட்டதடா
----வாழவைத்த மழைநீரும்

பிஞ்சுமுகம் பார்த்தேனும்
----பேய்மழையே நின்றுவிடு
அஞ்சுகின்ற மக்களுக்கு
-----ஆறுதலை தந்துவிடு.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (6-Dec-15, 5:16 pm)
பார்வை : 73

மேலே