ஆனந்தம் அது என்னடா அதைக்காணும் வழி சொல்லடா
நேரிய நடையில்லாமல்
நிமிர்ந்த பார்வையில்லாமல்
குடும்ப கஷ்டத்தில் கூனி நிற்கிறாய்!
குதூகலத்திற்காக ஏங்கி குறுகி நிற்கிறாய்!
ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறாய்,
உனக்காக,கொஞ்சம், உன்னுடயவர்களுக்காக கொஞ்சம்,
இன்னும் உடமைகளுக்காக, கொஞ்சம் நிறையவே!
கீதையில் சொன்னதெல்லாம் ஏட்டுசுரைக்காயாய்;
எடுக்கப்படவேண்டும், உன்னைப்பொறுத்தவரை, கொடுக்கப்படவேண்டும்,
விரும்பும் நாள் வரை, அதுவும் வாழ்நாள் எல்லாம்!
முன்னேற்றம் என்பது எல்லாவற்றிலும் ஆசை தவறில்லை!
தகுதியும் திறமையும் இருந்தாலும் இல்லையென்றாலும்
அதிர்ஷ்டத்தை நம்பியே அன்றாட வாழ்க்கை!
ஆசையுடன் காத்திருக்கையில் யாருக்கும் தெரியாமல்
ஆழ்மனதுக்குள் அங்கலாய்ப்புகளும்
பெருமூச்சுகளும் முக்கல்களும் முனகல்களும் -
ஒதுக்கி விட்டு கொஞ்சம் ஆசுவாசப்படு.
உனக்கு பரவாயில்லை, உன்னை விட அவர் இல்லை இவர்
யார் யாரோ மெல்லவும் முடியாது சொல்லவும் முடியாது
அவதியுறுகிறார் இல்லை, இன்னும் சில நேரம் புலம்பி தவிக்கிறார்!
வாழும் காலம் எப்போது இனிக்கும் தெரியுமா?
இனிய நாட்கள் நினைக்க நினைக்க, பேசப்பேச இனிக்கும்
பிள்ளைப்பிராயமாய், பின்பு பள்ளிப்பருவமாய்!
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல.
நேற்று என்பது முடிந்தது; கசப்பு அதை கசாயம் என நினை.
நாளையில் வரும் நல்லதை நாடு, கெட்டதை ஓரங்கட்டு, மற.
சந்தோஷம் சின்ன சின்னதாய் சேர்த்து வை!
கூடக்கூட அது ஆனந்தம் மனக்கணக்கில் வரவு வைக்கப்பட்டால்
தினமும் அதை எண்ணிப்பார், ரூபாய் நோட்டை எண்ணிப்பார்ப்பது போல!
ஆனந்தம் உனக்கு பேரானந்தத்தை தேட வைக்கும்!
சின்ன சின்ன செயல் பாடுகள், வெற்றிகள் சேர்க்கும்;
படிகள் நிறைய கொண்டது தான் இந்த வாழ்க்கை!
லிப்ட்-ல் பயணம் செய்ய நீ பிறக்கவில்லை என்று நம்பு.
ஒரே தாவலில் உச்சியை அடைய முடியாது,
ஒரே இரவில் கோடீஸ்வரனாகாவும் முடியாது, நம்பு.
இனிமையை மட்டும் கணக்கில் கொள்!
நற்பெயர் மட்டுமே உனது இலக்கு,
உனக்கு உன்னிடம், உன்னைச்சார்ந்த எல்லோரிடமும்.
தாங்கு எதையும், தூங்கு கனவுடன், ஏங்கு நாளை நடக்கும் என்று.
தாண்டாதே உனக்கு கிடைக்க வேண்டியது உனக்கே கிடைக்கும்.
காலம் மட்டுமே, காலன், கெட்டவைகளுக்கு; காவலன், நல்லவைகளுக்கு.
நீ ஆனந்தத்தை உனக்குள் வைத்துக்கொண்டு ஜன்னலையே
உற்று நோக்குகிறாய், அதை உன்னுள் உணர், அனுபவி, அசை போடு.
ஊக்கம் இருக்கும் வரை உழை; பலன் வரும் வரை காத்திரு. பதறாதே!
ஓய்வெடு, மீண்டும் உழை, இல்லை சும்மாயிரு. அது தான் சுகம்.
ஓயாமல் உழைக்க நீ ஒன்றும் இயந்திரம் அல்ல.
உன்னை நீ உற்சாகப்படுத்து, உன்னால் மட்டும் தான் அது முடியும்.
மனம் பண்பாடும், இல்லையேல் வீணாய் புண்படும்.
உன்னை ஆக்கிரமிக்கும் உன் மனதை சுத்தமாக்கு.
குப்பை போடாதே, கழிவுகளை உன்னால் மட்டுமே அகற்ற முடியும்,
ஏனெனில் அது உனக்கு மட்டுமே தெரியும், புரியும்.
சல்லாபத்தில் இல்லை ஆனந்தம், சந்தோசத்தில் மட்டுமே!
புகையில் மதுவில் அல்ல, அது உன்னை குப்பைதொட்டியாக்கும்.
காதலும் காமமும் உன்னை கொதிக்க வைக்கும் குளிரவும் வைக்கும்.
நன்றாய் இருந்தால் குளிர, இல்லையேல் கொதிக்க.
அகம் குளிர, புறம் மிளிர உன்னை நீ தினம் தினம் கவனி, அது போதும்.
ஓஷோவோ, ஈசாவோ, யோகாவோ, யோகமோ - எதுவும் தேவையில்லை.
இமயம் பொய் தேடியும் ரஜினிக்கும் ராஜாவுக்கும் கிடைக்காதது
உனக்கு கிடைக்கும், உனக்குள் ஒளிந்து உறைந்து விழுந்து கிடக்கும்
உன்னை தேடு, உணர்வுடன் தொடு, உரிமையுடன் தட்டிக்கொடு,
உனக்குள் இருக்கும் ஆனந்தம்
இன்னொருவருடன் பகிர், அதுவே பேரானந்தம்.
அதனால் தான் இந்த கவிதை.
*****************************************
அன்புடன்
- ஆடிட்டர் செல்வமணி