வயிற்றுப்பசி

காதல் பசியடக்கிக் கண்ணியம் காப்போரும்
போதப் பசியடக்கும் புத்திமானும் - வேதப்
பசியடக்கும் வித்தகரும் தத்தம் வயிற்றுப்
பசியடக்கி வாழ்ந்ததுண்டோ சொல்?

முறிந்த மணவாழ்வில் மூளும் பசியை
முறித்து முனிபோன்று வாழும் – அறிவில்
உயிர்காத்து வாழ்வோரும் வாழ்வதில்லை வாழ்வில்
வயிற்றுப் பசியைப் பொறுத்து.

ஆசை அடக்கி அரங்கேற்றும் நாடகத்தின்
ஓசை முடக்கி உளத்தன்பு - பாசை
மறந்து பரதேசி யானாலும் சாதம்
துறப்பதுண்டோ தம்சாண் வயிறு.

வயிற்றுப் பசிமுன் வருமெப் பசியும்
உயிர்க்குப் பெரிதில்லை. நீதான் துயிலும்
நிலையில் துயிலா திருக்கும் பசியின்
வலையி லதற்கே விருந்து.

அன்றாட வாழ்வை அகமகிழ்வோ டோட்டும்நீ
உன்வயிற்றைப் பட்டினிப் போட்டுப்பார். மன்றாடிக்
கையேந்தும் ஏழை வயிற்றுப் பசிதன்னை
மெய்யாய் உணர்த்து முனக்கு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Dec-15, 1:41 am)
பார்வை : 116

மேலே