யாரும் யாவருக்கும் - சந்தோஷ்

அவன் பெயர் என்பது
ஒரு பெயர்.
அவன் பெயரை நீங்கள்
சொல்லி எழுதி
உச்சரிக்கலாம்
உபசரிக்கலாம்
உற்சாகமூட்டலாம்
கேவலப்படுத்தலாம்
அன்னியப்படுத்தலாம்
கொலைச் செய்யலாம்
எதுவும் உங்கள்
விருப்பம் என்றாகலாம்.

அவன் பெயரைச் சொல்லி
அவனை அடையாளப்படுத்துவதில்
உங்களின் தாழ்ந்த எண்ணமும்
உயர்ந்த குணமும்
சரியான தவறாகவோ
தவறான சரியாகவோ
இருக்கலாம்.

அவன் பெயர் என்பது
ஏதோ ஒரு பெயர் தான்..
அவன் நல்லவன் என்பதும்
தீயவன் என்பதும்
உங்கள் பார்வை அகராதியில்
நீங்கள் வைத்திடும் அர்த்தங்கள் தானே..


அன்றி,
அவன் நல்லவனாகவோ
தீயவனாகவோ
வாழ விடுவதில்லை
நீங்கள் எப்போதும்.

அவன் என்பது அவளாகவும்....
அவன் என்பது நீங்களாகவும்
நீங்கள் என்பது நானாகவும்
நான் என்பது யாரோவாகவும்
யாரும் யாவராகவும்
இருக்கலாம்..

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (25-Dec-15, 6:05 pm)
பார்வை : 84

மேலே