எனக்குள்ளும் காதல் வரும்

எனக்குள்ளும் காதல் வரும்...

உன்னை நினைப்பதற்கு
நான் யாராகவும்
இருக்க தேவையில்லை
உன்னை உண்மையாய்
நேசிப்பவனாய் இருந்தாலே போதும்....
உன்னை உண்மையாகவே நேசிக்கிறான்
என்னை ஏற்று கொள்வாயா??

பல நாட்களாகபார்வதியையே நினைத்து கொண்டிருந்தான் அவன்....ஆனால் அதை அவளிடம் மட்டுமல்ல யாரிடமும் சொல்ல அவனுக்கு தைரியம் இல்லை...அவள் அந்த தெரு வழியாக போவதையும், வருவதையும் மட்டுமே பார்த்துகொண்டு தன் ஆசைகளை உள்ளுக்குள்ளே புதைத்து வைத்து கொண்டிருந்தான்...

அவள் உடல் அசைவுகள் அவனுக்குள்ளே புது புது உணர்வுகளை மழைத்துளி போல் சில்லென்று உணர்த்திக்கொண்டே இருந்தது, மற்ற பசங்களோடு சேர்ந்திருந்தால் அவனுக்கும் அவன் ஆசைகளை பற்றி பேசவோ இல்லை விவாதிக்கவோ ஏதாவது ஒரு வாய்ப்பு இருந்திருக்கும், ஆனால் என்ன செய்வது, பசங்க கூட்டம் இருக்க இடத்துக்கு போனாலே இவனை கேலிபொருளாக வைத்து தான் அவர்களுக்கு அன்றைய பொழுதே நகரும்..அதனாலேயே இவன் யாரோடும் சேராமல், தனியாக தனக்கென்று தனி வாழ்கையை உருவாக்கிக்கொண்டு யாரோடும் ஒட்டாமல் விலகியே வாழ்ந்து கொண்டிருக்கிறான்...

ஆனால் என்ன செய்தாலும் பார்வதியின் நினைவுகளையோ, அவள் மேல் இவனுக்குள்ள காதலையோ மாற்றிக்கொள்ள முடியவில்லை, அவளோடு கற்பனையிலேயே காதல் வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்...அவனுக்குள் பார்வதி வந்தது இப்பொழுது அல்ல, அந்த இன்ப தருணம் நிகழ்ந்து சரியாக ஐந்து வருடங்கள் இருக்கும்...தண்ணீரில் குளிக்க போனவள் தடுமாறி விழ, அவளை காப்பாற்றியது இவன் தான்...அந்த நேரத்தில் பார்வதியின் டிரஸ் கிழிந்து அவள் ஊருக்குள் செல்ல முடியாத நிலை, உடனே தன் டிரெஸ்ஸை கொடுத்து உதவியவனும் இவனே தான்...

இது வழக்கமாக எல்லா சினிமாக்களிலும் காட்டும் காதல் கதை தான் என்றாலும் இவர்களின் வாழ்க்கையில் ரொம்பவே வித்தியாசமானது, சினிமாக்களில் இது போன்று நடந்திருந்தால் இந்நேரம் ரெண்டு டூயட் சாங்காவது பாடி இருப்பார்கள், முத்த காட்சி, தனிமை சந்திப்பு என்று ஹார்மோன்களை தூண்டி விடுவது போல பல காட்சிகளை காட்டி இருப்பார்கள்...ஆனால் இங்கு அப்படியல்ல அவன் பார்வதியிடம் அதற்கு பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் அவளை நாள் தவறாமல் திருட்டுத்தனமாக எப்படியாவது பார்த்துவிடுவான்...

இப்படியே அவன் நாட்கள் போய்கொண்டிருந்தது...அவன் அவனது காதலை பற்றியோ வாழ்க்கை பற்றியோ கவலைப்பட்டதே இல்லை, என்ன இப்படி ஒரு வாழ்க்கை என்று சலிப்படைந்ததும் இல்லை..எல்லாவற்றையும் சந்தோஷமாகவே ஏற்று கொண்டான்...

ஒரு நாள் பார்வதியை திருட்டு தனமாக ஒரு சுவரின் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தான்...சிறிது நேரத்தில் அவளை காணவில்லை, எங்கு சென்றாள்? அவன் கண்கள் அவளை தேட ஆரம்பித்தது...

அவன் தோளில் யாரோ தட்டி அவனை கூப்பிடுவதை போல் இருந்தது, திரும்பி பார்த்தால் அது பார்வதியே தான்...சிறிது அதிர்ச்சியில் என்ன பேசுவது என்றே தெரியாமல் நின்றவனை பார்த்து...

"ஐ லவ் யு " என்று கண்களில் காதல் பொங்க பார்வதி கூற யார்கிட்ட பேசிட்டு இருக்கா? பின்னால யாராவது இருக்காங்களா என்று திரும்பி திரும்பி இவன் பார்ப்பதை புரிந்து கொண்டவள், "நான் உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன் லூசு, ஐ லவ் யு...இப்பவும் புரியலையா? நான் உன்ன காதலிக்கிறேன் என்று அழுத்தமாக கூற அவனுக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தோடியது...

பார்வதி நீ தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க, நான், அது வந்து... உனக்கு... என்ன பத்தி... என்று வார்த்தைகள் திக்கி தடுமாறி அவன் திணறி எதையோ கூற முயற்ச்சிக்கும்போதே அவன் வாயை கைகளால் அடைத்துவிட்டு அவளே கூறினாள்..."எனக்கு தெரியம், நீ "திருநம்பி" அத தானே சொல்ல முயற்ச்சிக்கிற என்று அவள் கூற அதிர்ச்சியில் அவன் உறைந்தே போய்விட்டான்...

"பார்வதி........" என்று அதிர்ச்சியும் வலியும் ஏக்கமும் கலந்த குரலில் அவளை கூப்பிட அவளோ எந்த சலனமும் இல்லாமல் "நீ திருநம்பினு நீ என்ன காப்பாத்தின அடுத்த நாளே எனக்கு தெரிஞ்சிடுச்சு, அதுக்கு அப்புறம் நீ என்ன தூரத்தில இருந்து காதலிச்சது, என்ன கிண்டல் செஞ்ச ராஜுவ போய் அடிச்சது இப்படி எனக்காக நீ செஞ்ச ஒவ்வொரு விஷயமும் எனக்கு நல்லாவே தெரியும்...இத்தன நாளா நானும் குழப்பத்துல தான் இருந்தேன்..ஆனா இப்போ தெளிவா முடிவு எடுத்துருக்கேன், என்ன உண்மையா நேசிக்கிற நீ என் வாழ்க்கைல இருக்கணும், எப்பவும் என்னோடயே இருக்கணும்" என்று கண்கள் கலங்க பார்வதி கூற, அதற்கு மேலும் தன்னை கட்டுபடுத்த முடியாமல் அவளை கட்டிகொண்டான்...

"பார்வதி, நான் திருநம்பினு தெரிஞ்சதும் என் வீட்லகூட கடமைக்காக தான் என்ன பாத்துக்கறாங்க , வெளியல கூட இது தெரியாம இருக்க வரைக்கும் தான் என்ன மதிக்கிறாங்க, தெரிஞ்சதும் அசிங்கபடுத்தறாங்க... ஆனா நீயோ என்ன புரிஞ்சிக்கிட்டு என்ன ஏத்துக்க தயாரா இருக்க , எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...இதுக்கெல்லாம் சேர்த்து உனக்கு என்ன செய்யபோறேனே எனக்கு தெரில" என்று உணர்ச்சிவசபட்டவனை தேற்றி "என்னோட படிப்பும் முடிஞ்சது, நாம வேற ஊருக்கு போய் நம்ப வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்..இங்க நம்பல ஏத்துக்கற அளவுக்கு இங்க யாருக்கும் பெரிய மனசு இல்ல...நாம உழைச்சி முன்னுக்கு வந்ததுக்கு அப்புறம் திரும்பவும் இதே ஊருக்கு வருவோம்...உன்மேலையோ உன் பிறப்பு மேலையோ எந்த தப்பும் இல்ல, எல்லாரும் மனுசங்க தான்...அன்பு இருந்தா போதும்...எல்லார் வாழ்க்கையும் பிரகாசமாகிடும்" என்று பார்வதி கூற கூற அவனுக்குள்ளும் நம்பிக்கை பிறந்தது....

இருவரும் முடிவோடு ஊரை விட்டு செல்ல வழக்கம்போல் ஊருக்குள் சில நாள் இவர்கள் கதை பரப்பரப்பாக பேசப்பட்டது, பார்வதி வீட்டில் அவளை தலைமுழுகிவிட்டனர் , அவன் வீட்டிலோ அவன் போனதே நிம்மதி என்று அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தனர்....

வருடங்கள் ஓடோடியது, பார்வதியும் அவனும் தங்கள் வாழ்க்கையில் போராடி, பல அவமானங்களை சந்தித்து இன்று நல்ல நிலைமையில் சொத்தும் சுகமுமாக தங்களை இந்த சமுதாயத்தில் அங்கீகரித்து கொண்டனர்...தாங்கள் வாழ்ந்த ஊரின் சீரமைப்புக்கு பெரிய தொகையை உதவியாய் அளிப்பதற்காக இன்று அவர்கள் அதே ஊருக்கு வர போவதாய் செய்தி வர ஊரே திரண்டது...ஆரத்தியும் கையுமாக வரவேற்க அத்தனை பேரும் காத்து கொண்டிருந்தனர்...அவர்களை எந்த ஊர் அவமானபடுத்தியதோ அந்த ஊரே இன்று அவர்களை வரவேற்க காத்து கொண்டிருந்தது...

கார் வந்து அங்கு நிற்க, அதிலிருந்து இன்றும் எளிமையாக காதல் பொழியும் கண்களோடு இறங்கிய பார்வதிக்கு அடுத்ததாக இறங்கினான் பார்வதியின் கணவன், காதலன்,அவளின் அவன் ... ஈஸ்வரன்...

இவர்கள் இருவரும் நிருப்பித்துவிட்டனர், காதலுக்கு சாதி மதம் மட்டும் அல்ல பிறப்பு கூட ஒரு தடையாய் இருக்காது என்பதை...

எழுதியவர் : இந்திராணி (4-Mar-16, 12:46 pm)
பார்வை : 643

மேலே