எரியும் மனசு

தகுதிமிக்க தொன்றை தரைமீது வீசி
தகுதியற்ற தொன்றைத் தாங்கி – மகுடம்
சிரமேற்றி அஃதே சிறப்பென்று காட்டும்
மரபால் எரியும் மனசு

இன்னார்க் கெனவே இதயமும் தீர்மானம்
முன்னதாய் செய்து முடிவெடுத்தப் – பின்னாலே
சொன்னதை செய்வதாய் சொல்வோர் தரும்பெரு
மின்னலில் எரியும் மனசு.

சின்னஞ் சிறுதியாகம் செய்கின்ற நெஞ்சத்துத்
தன்னம்பிக் கைகள் தளைத்தோங்கி – அன்பாய்
ஒழுகும் அதிசயம் ஊற்றெடுக்கும் யார்க்கும்
மெழுகாய் எரியும் மனசு

சொன்னதை செய்யும் சுயநல மற்றவர்
தன்னுளத் தூய்மை தனிலாடு – மின்பம்
அதிகரிப் பிந்த அவனியில் கூடின்
மதிபோல் எரியும் மனசு.

மனிதம் தொலைத்த மனசாட்சி மீண்டு
புனித மடைந்தாலே போதும் – இனிமை
முகிழ்த்திந்த வையம் மணக்கும் தருணம்
மகிழ்வாய் எரியும் மனசு .

துயர இருளில் துணைத்தேடி வாழ்வை
பயங்கொண்டு ஓட்டும் பலரும் – உயர
வழிசெய்து பார்க்கும் வசதிசெய் நன்றி
மொழியாய் எரியும் மனசு

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Mar-16, 2:14 am)
Tanglish : eriyum manasu
பார்வை : 167

மேலே