நான் நீ

மாதுளம் பூவாய் 
மகளிர் கூட்டத்தில் 
நீ...!
சோடியம் விளக்கில் 
நனையும் உருவமாய் 
நான்...!


வரப்பு இடித்து 
எலிவளை பறித்து 
எடுத்த கதிர்களில் 
வடித்த சோறாய் 
சிரித்தாய் நீ...!
அந்த -
கிலுகிலுப் ஓசையில் 
கிரங்கிக் கிடந்து...
அழுகை விடுத்த 
குழந்தையாய் நான்...!


அருளும் மானாய் 
மருளும் விழிதனில்
உருளும் திராட்சை 
மெருகாய் நீ...!
தீபம் ஏந்தி -
யாத்திரை வந்து 
தெருவினில் தெளித்த 
பௌர்ணமி வெளிச்சத்தில் 
விட்டிலாய் நான்...!
 
நான் -
மார்கழி...
குளிருக்குப் பயந்து
போர்வைக்குள் -
போர்வையாய் 
புதைந்திருந்த பொழுது,
எங்கோ கேட்கும் 
ஏற்றப் பாட்டில்...
முகத்தைக் காட்டி 
மூச்சுக் காற்றை 
முட்டச் செய்வாய் நீ...

எழுதியவர் : இராக. உதயசூரியன். (14-Mar-16, 11:14 am)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 178

மேலே