யாதுமாகி நின்றாள்
பெண்ணுக்கு உரிமை எல்லாம் ஏட்டிலே மட்டும்.
நீட்டியகையிலா வான்நிலா கிட்டும்.
பெண்மையை மேன்மையாய்
போற்றுவோர் சிலரே..
உண்மையாய் வன்மைகள் தருபலர் பலரே..
ஆணிடம் அடைபட்டு இ(ர)ருக்கிறது உரிமைகள்.
அரைஎன்னும் சிறையிலே
பெண் என்னும் மடமைகள்.
ஆதியிலா?பாதியிலா? அடிமைநிலை வந்தது.
ஓதிடவும், வாதிடவும் உரிமை இல்லை என்றது.
வான்மதியை கார்மேகம் மறைத்தது போலவே,
பெண்ணவளை சித்திரமாய்
நினைப்பது விசித்திரம்.
பெண்ணினம் முழுமையாய் சுதந்திரம் பெற்றதா?
ஆதிக்கஆண்களின் ஆசைகள் விட்டதா?
எத்தனை காலமடா அடிமையென வாழ்வது?
கத்தும் கடலிலே உப்பென போவது.
பணிக்கு சென்று உழைத்திடனும்.-ஆண்
வலிக்கு மருந்தென இருந்திடனும்.
பொருத்துப்போவது சிறப்பாம் பெண்ணுக்கு.
எதிர்த்து பேசினால் உயிர் இம் மண்ணுக்கு.
விடியாத. இரவினில் நாங்களும் இருக்க,
விழிசிந்தும் கண்ணீரை முடியவில்லை மறைக்க.
ஆண்முன்னே பெண்பின்னே
நடக்கும் முறை மறையவில்லை.
அடக்கிஆளும் அதிகாரம்
ஏன் இன்னும் புரியவில்லை.
தன்னைவிட குறைவாக படித்தவளை தேடுகிறான்.
பெண்ணைவிட பொன்னையே நோக்கியே ஓடுகிறான்.
நீர்க்குமிழிவாழ்விது உயிர்கூடு நிலையில்லை.
சேர்ந்தொன்றாய் வாழ்ந்திடுவோம்.
அன்பிற்கு விலையில்லை.