இப்போ எவகிட்டப்போய் ஏமாத்திக்கிட்டிருக்கானோ

இப்போ எவகிட்டப்போய் ஏமாத்திக்கிட்டிருக்கானோ
==============================================
இது என்ன எண்ணமோ ,,
பேசி நாலு நாளுக்கூட ஆகல
அதுக்குள்ள அவங்கிட்ட
என் மனசு
திறந்த நிர்வாண குழந்தை ஆகிறது
ஒருவேளை பிடிவாதமாக
மறுக்கிறபோதுதான்
தேடி வருவேன் என திட்டமிட்டிருப்பன்போல
நெருங்கலாமா வேண்டாமா என்று
யோசிக்கிறபோதே
யாரோடவாச்சும் அங்கெங்கேயாவது
வம்பிழுத்து ஒரண்டு பிடிச்சி நிப்பான்
எங்கேயோ பறந்துபோற தூக்கணாங் குருவி
எங்கவீட்டு பறவைசெத்துப்போன
கொட்டாங் குச்சி தொட்டில் மேலே
செத்த நேரம் உக்காந்து
அந்த தண்ணிய சின்ன அலகாலயும்
அதோட தலமுடியாலயும்
முக்கி முக்கி அலைக்கழிகிறதுபோல
எப்போவாச்சும் யாரோடாச்சும்
அவன் சிரிச்சு பேசிக்கிறப்போ
எரிச்சலா வரும்
என்கிட்டேயெல்லாம் எங்க பேசப்போறான் ன்னு
முயலுக்கு தோத்த ஆமைபோல
பதுங்கிபதுங்கி வந்து
எல்லாரும் அவன்கிட்ட பேசிட்டுப் போனப்பின்னாடி
மெதுவா நெருங்குவேன்
முதல் ல சிரிப்பேன் திரும்பக்கூடமாட்டான்
அடுத்து பேசுறதுக்கு முன்னாடி
முகத்த திருப்பி வச்சு
என்னைக்கோ தூக்கிப்போட்ட
என் கௌரிதிய தேடவச்சுடுவான்
"அதுவரை என்னை யாரும் அழகென்று
சொன்னதேயில்லை
இப்படி ஒருவரும் என்னிடம் பேசியதுமில்லை
ஆனால் இவன் சொன்னானே
அழைத்தானே "அழகி" என்று
எப்படியெல்லாம் பேசத் தெரிந்திருக்கிறான்
முதல் முறை ஒரு பிராடுப் பயலைக் கண்டு
உரக்கச் சிரித்து பிடித்துப் போயிருப்பதாக
சொல்லியிருக்கிறேன் ,, அதுவும்
மூன்று நான்கு முறை பிராடு பிராடு பிராடு என்று ம்ம்
பெண்கள் அழகாகும் தருணம் தெரியுமா
என்பான் ,, தெரியாது என்பேன்,,
மாலை ஆறு மணியளவில்
உன் அறையில் யாரையும் அனுமதியாதே
மின் விளக்கை அணைத்துவிடு
வாதாயனங்களை விசாலமாக திறந்துவிடு
கூந்தலை கட்டவிழ்த்து
ஜன்னல் புகும் காற்றோடு அலைக்கழிக்கச்செய்
சோப்புப் போடாமல்
அரைமணி நேரம்
குழாய் நீரால் வதனம் உடுத்திக்கொள்
பின் நன்றாக தளுவம் கொண்டு
உலர்த்திவிடு ,,
நிலைக்கண்ணாடிக்கு முன் செல்
ஏதும் செய்யாதே
கழுத்து நாணிக் கிடப்பாய்
விழிகளை மட்டும் ஏறே உருளவிடு
இரு நிமிடங்கள் போதும்
உன் கண்களை அங்கே காண்
கண்ணோடு கண் காண்
சன்னமாக இதழ்விரி
அந்திவானம் சிவந்ததுபோல்
உன் மேற்கன்னங்கள் சிவந்துகாணும்
க்ஷணம் இறுக மூடிக்கொள்
அப்போது
உன் மனதிற்குப் பிடித்தவன்
உன் முன்னால் வந்துமறைவான்
பின்பு மெதுவாகத் திற
அங்கே வந்து போனது யாரென்பதை
எனக்குமட்டும் சொல்"
என அவனையே
இனிமேல் காணும் கனவுகளுக்குள்
கிடத்திவிடுவான்
அவன் மட்டுமே சஞ்சரிப்பான் ம்ம்,,
"எங்கே ஐந்து நிமிடங்கள் குடேன் போதும்
மனதில் சட்டென எழும்பும்
எண்ணங்களை
இதோ அழகாகக் கோர்த்து
கவிதை செய்துவிடுகிறேன் என்று
பாசாங்குச் சொல்லிச் சிரிக்கும்
சிற்பதாரி பிராடு அவன்"
இப்படியெல்லாம்
பிடிச்சமாதிரியே பேசிட்டு கடைசியா வந்து
சும்மா சொன்னேன்னு
விரல் வெட்டிக் கொடுத்த
ஏகலைவனைப்போல
அறிவுரை சொல்லிட்டு
என்னோட தூக்கத்தையும் சேர்த்து
அவனே தூங்கிப்பான்
இதயத்தின் நிச்சலனத்திற்குள்
சில்சிலியாய் அவன் நினைவுகளின்
இரைச்சல்களினோடு
நானோ மினுக்கள் தொலைத்த
மின்மினியைப்போல
அவிரிழந்து கிடக்கிறேன் ம்ம்ம்
வர்ற வேலையே இருக்காது அப்போல்லாம்
அவன் என்ன பண்ணுறான்னு
பாக்கவே வரவேண்டி இருக்கு ,,
சொல்லிப்பார்த்தான் கேக்கல
விரட்டிப்பார்த்தான் மசியல
கேவலமா கேட்டும் பார்த்தான் அசையல
சொந்தவீட்டுல சோறு கூட இறங்காது
கூட இருக்குறவங்க
ஒரு வார்த்த பேசிட்டாலும்
இப்போல்லாம் நானா இப்படி இருக்கேன் ன்னு
என்னையே எனக்கு பிடிக்காதமாதிரி
அருவருக்கவச்சிட்டான்
ஒவ்வொரு சமயம் என்னை நினைச்சு
நானே அசிங்கப் பட்டிருக்கேன்
என் வாயிலிருந்து அவனைப் பிடிக்கும்னும்
சொல்ல வச்சிடுவான்
அதுக்கப்பறம் எதையுமே கண்டுக்காத மாதிரி
போய்டுவான்
என் பேருசொல்லி குட்நைட் சொல்லுவானான்னு
காத்திருப்பேன் ,,
இப்படியே இரு அடுத்த ஜென்மத்துக்காவது
விதி இருக்கான்னு பாக்கலாம் ன்னு
சொல்லி திறந்த வாய மூடிடுவான்
உலகத்திலேயே உறக்கம் கெட்டது
ரெண்டு பேருக்காக
ஒண்ணு இவனுக்காக
இன்னொண்ணு இவனுக்காக
காத்திருந்ததுக்காக
போயிட்டுவர்றேன்னு சொல்லிட்டுப் போறவன
முழுசா விட மனசில்ல ,,
அடுத்த வினாடி யாரு வந்து
கொத்திக்கிட்டுப் போய்டுவாங்களோ ன்னு
பயமா இருக்கும் ,,
என்னை பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு
கேட்டுக்கேட்டே ஒருவழி பண்ணிடுவேன்
அவன்கூட பேசறப்போத்தான்
நான் என்ன பேசுறேன்னு அவனுக்கும் புரியாது
ஏன் எனக்கே புரியாது
தீனி இறங்குதோ இல்லையோ
வயிறு முழுக்க நிரம்பியிருக்கும்
யாராவது புலம்ப கிடைக்கமாட்டாங்களா
அவனைப்பத்தி ன்னு
தேடிப்போய் புலம்புவேன்
அவனைப்பத்தி சொல்லுற எல்லோரும்
நல்லவிதமாவே சொல்லுறது இல்ல
பொம்பள பொறிக்கி,,
சிடுமூஞ்சி,, பிடிவாதக்காரன்
இன்னும் என்னெல்லாமோ சொல்றாங்க
ஆனாலும் அவங்கிட்டதான்
நெருங்க தோணுது
அவன் வருவானா
அவன்கிட்ட பேசலாமா ன்னு
தூங்காத என்னோட கடைசி
அஞ்சு நிமிஷமும்
அவனோட வரவுக்காகவே காத்திருக்குது
அவனை குறை சொல்ற எல்லாரும்
ரொம்பநல்லவங்கதான்
ஆனா ஏனோ மனசுக்கு அவனமட்டுமே
பிடிச்சிருக்குத
பொறிக்கியா இருந்தாலும் மனசுக்குப்புடிச்சுட்டா
வாழ்ந்திடலாம் நம்மை மாத்திக்கலாம்
எந்த ஆம்பளையும்
குரலால சிரிப்பால
நெருங்கி வந்து பாக்குற பார்வையால
அப்படி ஒரு நடுக்கத்த
கொடுத்ததில்ல ,,
இவன் முதல் முதல் ல என்கிட்டே
போன் ல பேசுனான்
வீட்ல யாருன்னு கேட்டாங்க,,
அப்போ இருந்துதான் பொய் சொல்லிப் பழகுறேன்
இவன்கிட்ட பேச
மூல முடுக்கெல்லாம் பாக்கவேண்டி இருக்கு
உள்ளங்கை முகம்
உடம்பெல்லாம் வேர்த்து மூச்சு முட்டும்
இன்னைக்கே செத்துடலாம் போல
அவன் குரலும் சிரிப்பும்
காதலிக்க கிடைக்கலையே ன்னு
பலமுறை படுக்கையை நனைய வச்ச
ஆண் திமிரு அவன்
காதல் ன்னு சொன்னதும்
புரிஞ்சிகிட்டவன் ,
கொஞ்சல் பேச்சுகளுக்கு
தாப்பா போட்டு ,,
அனுமதிக்காம ஓடிட்டான்
அதிக பசியோட
இப்போல்லாம் நெருங்கி வர்றான்
ஆனா என்ன எனக்குத்தான்
பயமா இருக்கு
ஆனாலும் விட மனசில்ல
இதோ அவனுக்குப் பிடிச்ச
மல்லிகைப்பூவ பின்னிகிட்டிருக்கு
அவனை நினைச்சு நினைச்சு
கடிச்சிகிட்ட என் விரலுக ,,
பாதி பால்கொடுத்த பசுமாட்ட
கன்னுக்குட்டி தேடி போறதுபோல
விடாம பின்னாலேயே துரத்துது நெனப்பு ,,
கஷ்டப்பட்டு கால் பண்றப்போல்லாம்
இடைக்கு வந்து போறவங்க கிட்ட எல்லாம்
எல்லா மொழியும் பேசுவான்
இங்க்லீஷ் பேசயிலயும்
நமட்டுச் சிரிப்புலயும்
அதென்ன கருமமோ மயங்கியே போய்டுறேன்
எவ்ளோ கோபத்தில திட்ட நினைச்சாலும்
ம்ம்ம்ம்,, ,இந்நேரம் எவகிட்ட
போயி இங்கிலீஷ் பேசி
பாட்டுப்பாடி சிரிச்சி ஏமாத்திக்கிட்டிருக்கானோ ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"