வாழ்வு தான் என் நோய் - சிறுகதை

அகல் மின்னிதழின் புத்தாண்டுச் சிறப்பிதழ் 2016 இல் வெளியாகிய எனது முதலாவது சிறுகதை!
நண்பர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்...

வாழ்வு தான் என் நோய்
------------------------

"அம்மா... அம்மா..."
தங்கம்மாவின் மகள் தான் கதறி அழுகின்றாள்.

இறுதியில் அவளுக்கு நேரம் கிடைத்ததோ என்னவோ தகவல் தந்ததும் வந்துவிட்டாள்.

இனித்தான் அவள் சாப்பாடு கொண்டுவரவோ வந்து பார்க்கவோ வேண்டிய தேவை இருக்காதல்லவா.

“அட, ஆமாங்க, அவ மகளுக்கு அவ பிள்ளைங்களை வளர்க்கவே நேரம் சரியாயிருக்காம்... இதுல எங்க நான் போய் எங்கம்மாவை பார்க்கிற... எண்டு சொல்லிச்சாம்... இப்பவாவது வந்திச்சே...”

தங்கம்மாவின் இறுதி ஊர்வலத்துக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.

***
"என் பிள்ளைய வந்து என்னப் பாக்கச்சொல்லுங்க... ஒரு தரமாவது சாப்பாடு கொண்டு வந்து தரச்சொல்லுங்க..."

இவ்வாறு தான் அறிந்தவர்கள் அந்த இல்லத்தின் அருகில் போகும் போது தங்கம்மா சொல்லிக்கொண்டிருப்பாள்.

இந்த நாகரிக உலகில் அவள் புலம்பலைக் கேட்கவோ சிந்திக்கவோ யாருக்கு நேரம். அவள் புலம்பலைப் புறக்கணித்தவர்களே ஏராளம். இருந்தும் அவள் நிலை கண்டு பரிதாபப்பட்டு அவள் மகளிடம் தகவல் சேர்ப்பித்த நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

“எனக்கு எங்க நேரம் இருக்கு, என் பிள்ளைங்களைப் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கு... இதுல நான் எங்க போய்ப் பார்க்கிறதும் சாப்பாடு கொடுக்கிறதும்...”

இதுதான் தங்கம்மாவின் மகளின் பதில். இந்தப் பதில் குறித்து ஆராயவோ வருந்தவோ அவர்களுக்கு எங்கு நேரம்... அவர்கள் அத்துடன் அதை மறந்துவிட்டு விலகி விடுவார்கள்.

ஆக... அவளது மகளின் பதிலோ, நிராகரிப்போ தங்கம்மாவைச் சேர்வதில்லை...

இந்தக் காலவெள்ளத்தில் தங்கம்மாவின் புலம்பல் ஓய்ந்தது தான் மிச்சம்.

***
"என்ன தங்கம்மா, எப்ப பார்த்தாலும் பிள்ளையாரே கதி எண்டு கிடக்கிற..."

அந்த இல்லப் பொறுப்பாளர் நந்தன் தான் அவ்வாறு கேட்டார்.

நந்தன் கூட ஒரு காலத்தில் தன் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்தான். தான் அந்த வேதனையை உணர்ந்திருந்தமையால் தன்னைப் போல் உள்ளவர்களுக்காக ஆரம்பித்ததுதான் அந்த "ஸ்ரீ அரவிந்த் இல்லம்".

அங்கு தான் மரத்தடி நிழலில் கம்பீரமாக வடஇந்தியச் சாயலில் அமர்ந்திருந்தார் அந்தப் பிள்ளையார்.

"என்ன செய்றது ஐயா, நம்ம தலையெழுத்துப் போல... இந்த நோயால வெந்து சாகவேண்டியிருக்குதே... நாம நல்லா இருந்தா நம்ம பிள்ளைங்க இப்படி நம்மள நடுத்தெருவுல தள்ளி விடுங்களா...?"

"என்ன சொல்ற தங்கம்மா... இவ்வளவு வயதுக்கு ஒரு நோயுமில்லாம நீ நல்ல ஆரோக்கியமாத்தானே இருக்கிற... பிறகு எந்த நோய் பற்றிச் சொல்ற..."

"இருக்கு ஐயா... ரொம்பக் கொடுமையான நோய் அது..."

"அப்படி எதை நீ சொல்ற..."

"ஐயா, வாழ்வு தான் என்னோட நோய்... எப்பவோ அது இல்லாமப் போயிருந்தா நானும் இப்படி இருந்திருக்கத் தேவையில்லையே..."

"நீயும் நல்லாத்தான் பேசுற தங்கம்மா... நீ சொல்றதும் ஒரு வகையில சரிதான்... எல்லாம் சரி நீ அப்படி ஒவ்வொரு நாளும் பிள்ளையார்கிட்ட என்ன வேண்டிக்கிற..."

"என்னை வந்து பார்க்க என் பிள்ளைக்கு நேரமில்லையாம்... அதான் அதுங்களை தொல்லை பண்ணாம போய் சேரணும்... அது மட்டுமில்ல ஐயா, என்ன இவ்வளவு காலமும் எந்த முகசுழிப்பும் இல்லாம பார்த்துக்கிட்ட நீங்களும் இந்த இல்லத்துல இருக்கிறவங்களும் கஷ்டப்படக்கூடாது ஐயா... அதனால தான் எந்த நோயுமில்லாம தூக்கத்துலயே நான் போயிரணும் எண்டு வேண்டிக்கிறன்..."

"ம்ம்..."
கனத்த மனதுடன் பெருகும் கண்ணீரை மறைத்தவாறு நந்தன் விலகிச்செல்கின்றார்.

***
வழக்கமாக நேரத்துக்கு எழுந்து தன் வேலைகளை முடித்துக்கொண்டு பிள்ளையாருக்கு அருகில் வந்து அமர்ந்து விடும் தங்கம்மா அன்று ஏனோ வரவில்லை.

அவளை வழக்கமாகக் கவனிக்கும் பாக்கியம் தான் தங்கமாவின் அறைக்குச் சென்றாள். தங்கம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை.

அவள் எழுப்பிப்பார்த்த போதும் எழுந்திருக்கவில்லை.

ஆம்...

தங்கம்மாவின் நோய் அவளை விட்டு நீங்கியிருந்தது. அவள் ஆசைப்பட்டது போல் தூக்கத்திலயே தன் மூச்சை நிறுத்தியிருந்தாள்.

எல்லோரும் வந்து பார்த்துவிட்டுப் புண்ணிய ஆத்மா என்றார்கள்.

அவள் மனவேதனையை யார் அறிந்திருக்கக்கூடும்.

எழுதியவர் : ஞா.நிறோஷ் (12-Apr-16, 12:57 pm)
பார்வை : 88

மேலே