உழைப்பாளி

அவன் ...
குனிந்து நோக்க...
கட்டெறும்பாய்...
மனிதர்கள்... நூற்றுக்கணக்கில் ...

அண்ணாந்து நோக்க...
ஆகாயம்...
அருகில் வந்து...
அந்தாதி பாடியது...

தடவி தரும் காற்று...
இன்ப-மாய் இதயம் வருட...
சத்தமில்லாத...
சுத்த நிசப்தம்....
கால்கள்...
தரையில் பாவாமல்...
உடல்...
அந்தரத்தில் தொங்க

காலடியில்...
ஒரு கழுகு...
இது தன்னை...
விட பெரிய...
ஒரு பறவையினமே...
என்று அவனை
பார்த்து பயந்து ஒதுங்க...

ஆண்டவன்...
அவனே என்று.
ஆணவம் கொண்டான்..
கண நேரம்...

கவ்வி இழுத்தது... ...
கனன்று எழுந்த...
வயிற்று பசி....
கட்டி இழுத்தது...
நிஜவுலகிற்கு...

குனிந்த பார்வையில்...
தலை சுற்றியது...
அண்ணாந்து பார்க்கையில்...
ஆதவன் ஒளி,
அனலாய் தகித்தது...

பிடிப்பற்ற நிலை...
பேரச்சம் தந்தது...
மனைவியும் மழலையும்...
கண்ணில் ஆட...
பண தேவைகள்...
பட்டுவாடா...
மனம் முழுவதும்...

சாயங்கால சம்பளத்தில்...
சந்தோஷப்பட்டது மனது....
போதையை நினைத்து...
பேதை மனது பேதலித்தது....

சாமான்யனின் சபலம்...
கண நேரம்...
கலங்கி தெளிந்தது....
"அண்ணே இதை கொஞ்சம்
புடியேன்"....
சாரப் பலகையில்...
சும்மாடு சுருங்க...
சுமை தாங்கி வந்தாள்...
சித்தாள் ஒருத்தி,,,,

வானுயர்ந்த கட்டிடத்தின்...
வடிவம் கூட்ட...
கட்டிய சார கம்பில்..
கரணம் தப்பினால்...
மரணம் என்று...
கவலையேதும் கொள்ளாமல்...
கலவை எடுத்து...
பூசினான்...
கட்டிட தொழிலாளி....

வானுயர்ந்த அந்த...
வளாகத்தில்...
வளர போகுது...
பல தொழில்கள்...
செல்வம் சேரும்...
செல்வந்தனிடமே...

பலர் சேர்ந்து, சோர்ந்து
வியர்வை சிந்தி
படைத்த போதும்...
தாஜ்மஹாலின்...
படைப்புரிமை...
படைப்பாளிக்கு அல்ல
பார் ஆண்ட ...
வேந்தனுக்கே

அண்ணாந்து பார்த்து,
ஆதங்கமாய்...
ஒரு பெருமூச்சு..
அது மட்டுமே...
இந்த தொழிலாளிக்கு...
என்றாலும் தொழிலாளி..
இல்லையேல்...
இயலாது ... இயலாது...
இயல்பு வாழ்க்கை...

சாரம் முதல் சாக்கடை வரை...
சுறுசுறுப்பாய் ... சுற்றும்..
உழைக்கும் வர்க்கம்...
ஓய்ந்து போனால்...
நாடும், மக்களும்...
நாசமே...

மே மாதம் மட்டுமல்ல
மேதினியில் உயிர்
உள்ளளவும்...
தொழிலாளிக்கு தோல்வியில்லை...

கற்பனையின்...
துணை கொண்டு...
கவி பாட வந்தேன்..
கவிதையின் போக்கில்
கை கூப்பி வணங்குகிறேன்...
என் தொழிலாள தோழர்களை..

வாழ்க தொழிலாள தோழர்கள் .
வளர்க அவர்தம் வாழ்க்கை தரம்...ஆனந்த் வி

எழுதியவர் : ந்கவிதை - ஆனந்த் வி (1-May-16, 2:07 am)
Tanglish : uzhaippaali
பார்வை : 110

மேலே