நீயின்றி அமையாது உணவு

மண்வாசம் வருகிறது
மழை வரவில்லை
உழவர் வருகிறார்*

ஒவ்வொரு உழவரும்
ஒவ்வொரு ஓவியரே
தன்னை அழுக்காக்கி
உலகை அழகாக்கிறாரே*

நீ
சேற்றில் முளைத்த
செந்தாமரை
வெயிலில் விளைந்த
கருப்பு வைரம்*

செய்யும் தொழிலே தெய்வம்
தெய்வம் செய்யும் தொழிலே
விவசாயம்*

நீ
கிழவனல்ல‌
கிழக்கில் உதிப்பவன்
நீ
வெரும் பொருளல்ல‌
பரம்பொருள்*

கலப்பையோடுதான்
உழைக்கிறாய்
களைப்பில்லாமல்தான்
வாழ்கிறாய்*

சேவல் கூவுகையில்
எழுகிறாய்
காலையில்
காளைகளோடு உழைக்கிறாய்
ஆலிலும் வேலிலும்
பல் துலக்குகிறாய்
சூரியனில்
மணி பார்க்கிறாய்
வாழை இலையில்
வயலில் உண்கிறாய்
மாமர நிழலில் தூங்கி,
நிலா வெளிச்சத்தில்
வீடு திரும்புகிறாய்
இயந்திரங்களோடு
வாழ்பவர்களின் மத்தியில்
நீ
இயற்கையோடு வாழ்கிறாய்*

ஒவ்வொரு உழவரும்
ஒவ்வொரு அம்மாதான்
சோறுபோட்ட கைகளுக்கே
சோறு கிடைப்பதில்லையே?*

மழை பெய்தால்
தண்ணீரில் வாழ்கிறாய்
மழை பொய்த்தால்
கண்ணீரில் வாழ்கிறாய்*

ஆல்கஹால் தயாரிப்பவனுக்கு
வங்கிக்கடன் இருக்கு
அரிசி தயாரிப்பவனுக்கு
வங்கிக்கடன் மறுப்பு*

நெற்பயிர்
தலைகுனிந்தே
இருப்பதால்தானோ
நிலமுழுவதும்
கற்கள்
தலை நிமிர்ந்திருக்கிறதோ
அது வெறும் கற்களல்ல‌
உழவனின் சமாதிகள்*

என்று உணர்வார்களோ?
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது உணவென்று *

எழுதியவர் : சுகுமார் சூர்யா (10-May-16, 11:45 pm)
பார்வை : 108

மேலே