காதல் கானலாய்

காதல் கானலாய்

இலாடம் உடைந்த
கானல் புரவியில்
உனது
இதயச் சுனை தேடி
நினைவு விலங்குகளின்
நிசப்த நடுநிசி யாத்திரை..

சிறுபுட்களின்
உராய்வில்
வெறுமைப் பாதையில்
சலசலப் பறவைகளின்
சங்கேத ஒலிகள்.

இரவு ஓவியனின்
மாயஜாலத்தில்
பகலின் பசுமரங்கள்
இரவின்
கருமை மரங்களாய்
கண்களுக்குள் நிழலாடல்.

நீண்ட சாளரப் பாதையெங்கும்
மின்மினிப் பூச்சிகளின்
மிரளாத
மின்வீச்சுப்
புன்னகைகள்.

காதல் சோகத்தில்
கட்டிப்போட்டபடி
மெளனச் சிறகுகளின்
மனக்குமுறல்கள்....

எரிமலையாய்
தொடங்கிய எண்ணச்சிதறல்கள்
இதயம் பிளந்து
இப்போது காட்டாறாய்
கண்டபடி போகிறது....

இப்பொழுதெல்லாம்
அழுவதில்லை நான்..

சோகங்களின் பாலாபிசேகத்தில்
கலந்துபோகிறது
என் கண்ணீரும்
உற்பத்தியாகும் செந்நீரும்....

என் இரத்தம் உறையும்
இதயத்தோல்விகள்
உனக்கு
உறைபனியாய்
குளிர்கிறது....

எதுகை மோனையுள்ள
அருங்கவிதை நானில்லை.
எதுவுமில்லா
வறுங்கவிதை நான்.

என் இதயக்கருவை
உனக்குள் எடுத்துச் சொல்ல
சொற்கட்டமைப்பை
தேடித் தேடி
நானே தொலைந்து போனேன்..

உச்சாணிக்கொம்பில்
நின்றபடி
என் கவிதையின்
உறவுக் கருவை
அதால பாதாளத்திலும்
ஆறடி மண்ணுக்குள்
ஆழத்தள்ளிவிட்ட
தைரியசாலி நீ
வாழவேண்டும்....

சாம்பலின் சுமையில்
நான்
கானலாக வேண்டும்
அதுதானே உன் விருப்பம்.
நீ வென்றுவிட்டாய்.
நான் வெறுமையாய்..

என் இரத்தம் உறைந்து
ஆவியாகும்
உயிரின் போராட்டத்தில்
சிரிப்புகளை சிதறியடிக்காமல்
கொஞ்சம் இரக்கத்தை
இழையோட விட்டிருந்தால்
எழுந்து விலகிப்போயிருப்பேன்.

இப்போதும் ஒன்றுமில்லை
உனது
மாடமாளிகை இதயாவாசம் விட்டு
என் நினைவுகளை
கொட்டிப் போகிறேன்.

எனைப்பிடிக்காத
உனக்குள் நானிருந்த
வாசத்துக்காய்
வாடகையோடு முன் தொகையாய்
மொத்த நினைவுகளையும்
விட்டுத்தான் போகிறேன்.

பாக்கி எதுவுமில்லை.
என் பாவம் மட்டும்தான்
உனக்குள் நிறைந்திருக்கிறது.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (20-May-16, 9:19 am)
பார்வை : 348

மேலே