உயிர் மூச்சு விற்பவன் -சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
நொடிந்துப்போன
அந்த நொடிகளுக்குப் பின்
கடற்கரைக்குச் சென்றேன்
ஆழித் தாய்
ஆறுதல் அளிப்பாளென.
நெற்றியில் பட்டு
மாலைச் சூரியன்
எதையோ அறிவுரைத்திட்டான்.
பாதங்களில்
அலை நுரைத் தோழிகள்
எனக்கு முத்தச்சிகிச்சையளித்தார்கள்.
அடுத்தது என்ன என
விளங்காது நோக்கிய
தூரத்தில்
தொடுவானத்தை தொட்டுச்
சென்றது ஓர் ஓடம்.
உன் தோல்வியிரவில்
வெளிச்சமாய் இருப்பேனென
பகல் வெண்ணிலா
தனது தோழமையைக் காட்டினாள்.
எல்லாம் சரி..
பொருளாதாரம் இல்லையெனில்
வாழ்க்கைக்கு அர்த்தமேது
மூலதனத்திற்கு என் செய்வேனென
மூளைக்குள் ஆயிரமாயிரம்
கேள்விப் பிடுங்கிகள்.
மூலதனமெதற்கு
முயற்சி போதும் என்பதாக
குட்டி குட்டி மழலைகளிடம்
தன் மூச்சுக்காற்றை
வண்ண வண்ணமாய்
விற்றுக்கொண்டிருந்தான்
பலூன் வியாபாரி.!!
**
இரா. சந்தோஷ் குமார்.