வழிவகை காண்போம் நாமும்

குழந்தை தொழிலுக்கு எதிர்ப்பென்று
--குறுஞ்செய்தி கூறும் மனங்களே
கையேந்தி திரிந்திடும் சிறார்களை
--கண்டும் காணாமல் இருப்பதேன் !

ஏழ்மை என்பதால் ஏந்தும்நிலை
--ஏனிந்த அவலம் தொடர்கதை !
அநாதை என்பதால் அவலநிலை
--அல்லும் பகலும் அவர்கள்நிலை !

வளரும் வல்லரசாம் நம்நாட்டில்
--வளர்கிறது வறுமையும் நாளும் !
கைப்பிடி சோறுக்கே சாலையில்
--கையில் தட்டுடன் சிறுவர்கள் !

திட்டமிடும் அரசில்லை இதுவரை
--திட்டவட்ட கொள்கையும் இல்லை !
வட்டமிடும் கழுகாய் அரசியலில்
--வளைத்துப் போடும் எண்ணமே !

தேய்ந்திடும் நிலையால் சாய்கிறது
--வாழ்ந்திட நினைக்கும் சமுதாயம்
அன்றாட வாழ்விற்கே அல்லலுறும்
--மண்ணில் பிறந்த மழலைகள் !

நிலையாய் இந்நிலை மறைந்திட
--கையேந்தும் நிலையும் மாறிட
ஏங்கிடும் எதிர்காலம் ஏற்றமுற
--வழிவகை காண்போம் நாமும் !

பழனி குமார்
14.06.2016

எழுதியவர் : பழனி குமார் (14-Jun-16, 10:55 am)
பார்வை : 360

மேலே