காதலோடு கடைசி செல்ப்பி
நாம்மை
யாராவது
பார்த்துவிடுவார்களோ
என்ற பயத்திலே
நாம்
பேசிக்கொள்வதில்லை.!
காதல் கடிதங்களை
நம் நண்பர்களின்
கைகளில்
கட்டியனுப்பிக்
கொண்டோம்.
நீ கொடுத்தனுப்பும்
கடிதம் உன் தோழி வழி
என் தோழன் வழி
என்னைச்சேர
இரு நாட்கள் ஆகும்..
செல்போன் டவர்கள்
இல்லாத வானத்தை
நான்காய் மடித்து
அனுப்பிவைப்பாய் நீ.!
அந்தச் சதுர வானத்தை
சட்டைப்பையில்
வைத்துக்கொண்டு
பூமியில் மிதப்பேன் நான்.!
நிறைந்த கடிதங்களில்
ஒன்று உன்
அப்பாவை எட்டிப் பார்த்துவிட
இரண்டு துண்டானது
காதலும் கடிதமும்..
தாவணி
கட்டவே குறிப்பெழுதி
வைத்திருந்த உன்னை,
சேலையில் சுத்தி
பார்சல் செய்துவிட்டார்கள்.
கல்யாணக்கொரியரில்.!
பிறகென்ன
பெறுநர் பெயர்போட்டவன்
பெற்றுக்கொண்டு போக
நானோ
முகவரியின்றித்திரிந்தேன்.
கடைசியாய்
ஊர் தபால்காரன் மகளே
எனக்கு முகவரியாக
நானும் திருமணம்
செய்துகொண்டு..
சேர்த்துவைத்த உன்
கடிதங்களோடு
செல்பி எடுப்பதாய் முடிந்தது
என் கவிதையும் காதலும்.!
- நிலாகண்ணன்