ஒருமனதாய்...
கல்லூரி படித்த தருணமது. நாங்கள் நண்பர்கள் மொத்தம் ஆறு பேர். ஒருமுறை விடுமுறை நாளில் அனைவரும் உணவகம் செல்வதென்றும் அதன் பின்னர் திரைப்படம் செல்லலாம் என்று ஒரு மனதாக தீர்மானித்தோம். அனைவரும் ஒரே மாதிரி உடையணிவதும் ஓர் இலக்காக்கிக் கொண்டோம்.
அனைவரும் ஒன்றுபோல் உடையணிந்து திருச்சி தெப்பகுளத்தை ஒட்டி ஒருமாடியில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் சங்கமித்தோம். ஆறுபேரும் ஒரே உணவக மேசையை ஆக்ரமித்துக் கொண்டாலும் அவரவருக்கு பிடித்த உணவுகளை எடுத்துவர செய்து உண்டோம்.
சற்று நேரத்தில் கிட்டத்தட்ட அனைவரின் பார்வையும் எங்களை வட்டமிடத் துவங்கியது. எங்களின் ஒத்த உடையைக் கண்டு வியக்கிறார்கள் என்பதால் இருமாந்தோம். போதாக்குறைக்கு அருகில் உள்ள மேசையில் அமர்ந்திருந்த கன்னியர்களின் கண்களும் எங்களை வட்டமிட்டது பலத்த புன்னகை கலந்த பேச்சுடன். எங்களுக்கோ இருப்பு கொள்ளவில்லை கர்வம் தலைக்கேறியது.
கிட்டத்தட்ட அனைவரும் சாப்பிட்டு முடித்த தருணத்தில் ஒருமித்து கைகழுவச் சென்றோம் ரசிகர்களின் கண்பட கெளரவத்துடன். அப்போது அங்கேயோர் ஒருமித்த குரல் சொன்னது இங்கே கைகழுவுங்கள் என்று திரும்பி பார்த்த எங்களுக்கோ பேரதிர்ச்சி. ஆம் எங்களைப் போல் உடையணிந்த ஆறு பேர் அதைச் சொல்லியதைக் கேட்டு. அந்த உணவகப் பணியாளர்கள் அணிந்திருந்த உடையும் எங்களது உடையும் ஒருமித்த வண்ணத்தில்.
அனைவரும் சிரித்த காரணம் தற்போது தெளிவாக விளங்க மீண்டும் ஓர் முடிவெடுத்தோம் ஒருமித்த மனதுடன், வேறு என்ன ஆளுக்கொரு திசையில் ஓடுவதென்று..டோட்டல் புரோகிராம் கேன்சல்