தேடலின் சுயபக்கம்

தனிமனித ஒழுக்கம்,
குறைந்து போவது இழுக்கே!!!

குறையாதிருக்க,
தேடல் அவசியம்,
நான் யார்? என்ற
தேடல் அத்தியாவசியம்.

நான்,
அழிவில்லா ஆன்மா,
அழியும் உடலை கடனை கொண்டு,
அழிக்க வந்தேன் பாவங்களை,
அழித்து மாற்றவந்தேன் முன்வினை கர்மங்களை!!!

அளிக்க வந்தேன் மகிழ்ச்சியை,
அளிக்க முயன்றேன் உள்ளக் குளிர்ச்சியை,
அளிக்க வந்தேன் உதட்டில் சிரிப்பினை,
அளிக்க முயன்றேன் முயலும் குணத்தினை!!!

அழியும் உடலென அறிந்தும்,
அழியவில்லை அவாக்கள்
வழி கடக்க கடக்க
கூடியது இனிக்க இனிக்க!!!

நினைவில் இனிப்பவற்றை,
நிரந்தரமாய் வேண்டி,
நிலைமை மறந்து போகின்றோம்!!!
நிராசை அடைந்து நிற்கின்றோம்!!!

வானில் பறக்க வேண்டி,
கனவு கண்டால் தவறில்லை,
வானத்தையே விலைக்கு வேண்டி,
நிலவிடம் விலைபேசுவது தவறில்லையோ?

மழை தரும் மண்வாசம்
எத்துணை நீரூற்றினால் உருவமோ?
ஊற்றித்தான் பாரேன்
பிறந்திடுமோ, மண்வாசம்?

தேவையற்ற நிகழ்வுகளை,
அரைத்து அரைத்து கூழாக்கி!!!
மனதில் புடைத்து வைக்கின்றோம்,
புளித்து மணந்தால் நோக்கின்றோம்!!!

தெரியும்
உள்ளுணர்வுக்கு, பாதை தவறென,
உணரும் பக்குவம் வேண்டுமென,
உடையும் கண்ணாடி தானென,
ஊசிநூலாய் கோர்க்க இயலாதென...

தற்காப்பு,
பாம்பிற்கு விஷம் தற்காப்பு
விலங்கிற்கு குணம் தற்காப்பு
மனதிற்கு கடிவாளம் தற்காப்பு
மறந்தால் மனிதனுக்கு ஏது காப்பு?

தவறில்லை,
மலர் இறைவனடி சேர விழைவது,
விழையுமோ காலில் மிதிப்பட, விதிப்பட
விழுந்தால் வினையென எனலாம் - மதிப்பட
விழவைத்தால் சொல்லமுடியுமோ தவறில்லையென?

வெற்றி தோல்வியென பெயரிட்டு,
குதிரை கடிவாளம் சேர்த்துக்கட்டி,
வெற்றியை மட்டும் இலக்காக்கினால்,
பாதையில் ஆயிரம்
பாறைகள் இடரச்செய்யும் கால்களை...
கிரகித்து எழுபவர் தெளிவாகிறான்!!!
சுருண்டு விழுபவன் சறுகாகிறான்!!!
* * * * * * * *
ஒழுக்கம்
குறையாதிருக்க,
தேடல் அவசியம்,
நான் யார்? என்ற
தேடல் அத்தியாவசியம்.

கல்லெறிந்த குளத்தின் நீர் ,
-----களையுமோ தாகத்தினை,
மண்ணோடு உறவாடும் இனிப்பு,
-----இனிக்குமா நாவதனில் - அன்று

நிலமுதித்த குடை,
நிலமகளின் கோடை
எதற்குமில்லை தடை
எதற்கினி படை!!!

நாகாக்க சொன்னான் வள்ளுவன்,
காதலின் இன்சுவையை அள்ளித்தின்றவன்,
எவனவன்? இலர், யாருமிலர், உள்ளோரெல்லாம்
கிள்ளி விடுபவரே, உதிரத்தை துள்ள விடுபவரே!!!

தள்ளி தள்ளி ஒருகூட்டம் அடக்க,
சொல்லி சொல்லி ஒருகூட்டம் ஒழிக்க,
அள்ளி அள்ளி ஒருகூட்டம் வீச,
அல்லி அல்லி, நீர்நிலை பிரிந்த அல்லி...
* * * * * * *
அறிவாய்,
அறியாமையை அகற்ற வழி அறிவாய்!!!

அகற்றி,
தன்னிலை யாதென கிரகித்து புரிவாய்!!!

புரிந்து,
புத்துயிர் அளித்து உன்நிலை காப்பாய்!!!

காத்து,
கடமையை அறிய கண்களை திறப்பாய்!!!

திறந்து!!!
திரவமாய் ஓடும் திறனைநீ கொள்வாய்!!!

கொண்டு,
கொள்கையை அன்பெனும் விதையைநீ நடுவாய்!!!

நட,
தேடல் அவசியம்,
நான் யார்? என்ற
தேடல் அத்தியாவசியம்.
* * * * * * *
உயரங்கள் உண்மையென உவகை கொள்கிறான்,
ஆனந்தமாய் ஆழிமேலே நடக்க விழைகிறான்,
அதிகார மோகத்தை அடைய நினைக்கிறான்,
அனந்த வாழ்வுதனை இழந்து தவிக்கிறான்.

ஓரின விரு
விலங்குகள் ஒன்றையொன்று கொள்ளா!!!
பறவைகள் பாதுகாக்காமல் செல்லா!!!
தாவரங்கள் பொறாமை கொள்ளா!!!
அதனாலே இவனுக்கு வேண்டுமெல்லா!!!

ஓரறிவு அதிகமென்ற அதிகாரமோ?
அறிவோடு பிணைந்துவிட்ட மற்றொரு ஆ...வோ,
உயர்ந்த சாதியென்ற பாகுபாடோ?
தான்மட்டும் உயர வேறுபாடோ?
* * * * * * *
மானுடர்களே,
குஜராத்தி கிழவனின் கொள்கைகளை,
எங்கே கரைத்து விட்டீர்கள்?
குளங்களில் கரைத்தீரோ?
ஆச்சர்யமே,
குளங்களையே தேடும் வேளையில்
நீர் எங்கு கரைத்தீரோ?

தேவை,
நான் யார்? எனும்
தேடல் அவசியம் தேவை.
* * * * * * *
நீ யார்? யென நானறியேன்.
ஒன்று சொல்வேன்,
அன்போடு தொடங்கி,
அன்போடு முடித்தால்,
அறிய வாய்ப்புண்டு,
வினவும் வினா?
விடியலெல்லாம் விடையாய்!!!

இரா நவீன் குமார்

எழுதியவர் : இரா நவீன் குமார் (19-Jul-16, 5:06 pm)
பார்வை : 257

மேலே