என் மகள் எனக்குத் தாயானாள்

என் மகள் எனக்குத் தாயானாள்.
அவளுக்கு நான் சேயானேன்.
இந்த சிற்பச்சிலை தினம் சிரித்தே
என் சோகம் விரட்டும் தாயானாள்...!

பால் மணக்கும், தேன் துளிர்க்கும்.
இந்த மழலைப் பேச்சின் தாலாட்டில்
யாழ் தோற்கும், வேய்ங்குழல் தோற்கும்
பேதையிவள் நாவசைவில்...!

தொப்புள்கொடித் தொடர்பலையின்
தெவிட்டாத இராகமிது...!
துவண்டு விடா சேய் எனக்கு
தெம்பு தரும் தென்றலது..!

தாய்மை உணர்வின் வேதமது..
சேய் எனக்குச் சொந்தமது.
தனித்துவத்தை சொல்லுகின்ற
பெரும் தாயன்பின் சிகரமது..!

முலைப்பாலின் மொத்தங்களை
முத்தமாய் அவள் தருவாள்..
மேகக்குளிர்ச்சி உணர்வுகளை
அந்த முத்தத்தில் மறைத்திருப்பாள்.

குறிஞ்சிமலை உயர துயரங்கள்
குறைவென்றே தோன்றி நிற்கும்.
முல்லை நிலத்தின் தளிர்வனப்பும்
முத்தச்சிலிர்ப்பில் முடங்கிவிடும்

மருத நிலத்தின் பசுமையெல்லாம்
மதிப்பிழந்து வியந்து நிற்கும்.
நெய்தல் கடல் பேரலைகள்
சீறுவதை தள்ளி வைக்கும்...!

பாலை நிலத்து சுடுமணலும்
குளிர் நீரை சுரந்து நிற்கும்
இந்த சங்ககால நிலக் கூறுகள்
சத்தமின்றி இரசித்து நிற்கும்..!

முத்தத்தின் உள்ளுணர்வில்
சங்கத்தமிழ் கற்றுத் தருவாள்
முத்த சத்த மோகனத்தில்
உயர் சந்தத்தையும் கற்றுத் தருவாள்

மார்பணைக்கும் சுகந்தங்களில்
மலர் மென்மையை தோற்கடிப்பாள்
பிஞ்சுவிரல் பஞ்சு கொண்டே
சேயெந்தன் கண்ணீரை துடைத்திடுவாள்

அஃறிணையின் அணுவினிலும்
அதன் தாயின் தன்மை தானிருக்கும்
இந்த உயர்திணையின் ஆதிச்சொல்லும்
அம்மா என்றே எடுத்தியம்பும்...!

என் மகள் எனக்குத் தாயாகி
இன்று செந்தமிழ் கவிபாடும் திறம் தந்தாள்.
என் மகள் எனக்குத் தாயாகி
இனி வெற்றிபல வாங்கியென் கைசேர்ப்பாள்..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (19-Aug-16, 8:22 pm)
பார்வை : 2886

மேலே