சிறகொடிந்த பறவைநான் -- தரவு கொச்சகக் கலிப்பா
சிறகொடிந்தப் பறவையாய்ச்
---- சீரற்று நிற்கின்றேன் .
உறவுகளைத் தேடுகின்றேன்
----- உண்மையிலே வாடுகின்றேன் .
மறந்திடவும் முடியவில்லை .
----- மறுவாழ்வும் எனக்கில்லை .
பறந்திடவும் சிறகில்லை
----- பருவமகள் என்செய்வேன் .
வாட்டத்தைப் போக்கிடவும்
---- வாழ்வுதனைத் தந்திடவும்
நாட்டினிலே நல்லவர்கள்
---- நவில்வரோ என்நிலைமை .
கோட்டைக்குள் சிறைப்பட்டக்
----- கோலமயில் நானன்றோ .
மீட்டெடுக்க வருவருண்டோ
---- மிடிகளைய எவருமுண்டோ ?
ஏற்றமிகு மங்கைநானே
---- எதனாலோ கண்ணீரே .
மாற்றமில்லை இவ்வுலகில்
----- மானிடரைத் தேடுகின்றேன் .
ஆற்றாமை மிகுதியினால்
----- அழுகின்றேன் கேட்கிறதா ?
காற்றாக மாற்றிடுங்கள்
---- கணப்பொழுதில் பறந்திடுவேன் .
வசந்தத்தின் வாயிலுக்கு
---- வழிவகையும் செய்திடுங்கள்
திசைதோறும் யாருமில்லை
----- திரும்பாதா நல்வாழ்வு .
விசையோடும் விழிதேடும்
----- வீரமிக்கக் காளையரை .
பசையோடும் மனத்தினிலே
----- பதியாகப் பதித்திடுவேன் .
அந்தநாளின் நினைவெல்லாம்
---- அப்படியே பிம்பமாக
இந்தநாளில் கண்முன்னே
----- ஈரமாகத் தெரிகிறது .
எந்தநாளும் அந்நினைவு
----- என்னைவிட்டு நீங்காது .
விந்தையான உலகத்திலே
----- விண்ணில்நான் பறந்திடுவேன்