குடிகுடிகுடி குடல் வெந்து செத்து மடி

குடி....குடி....குடி
குடல் வெந்து செத்து மடி!

நாசியில் நுழைந்த போதை நெடி
நஞ்சாய் குடிபுகும் அடுத்த நொடி
நரம்புகள் தளர்ந்து நாளங்கள் பெருத்து
நலம் கெட்டு அதிரும் உயிர் நாடி

குடி....குடி....குடி
குடல் வெந்து செத்து மடி!

குடிபோதை நட்பாய் உறவாடி
அடிமையாக்கி பின் அறிவைக் களவாடி
சட உறுப்புகள் அழியும் போராடி
பிடி காலன் விரைவான் உனைத்தேடி

குடி....குடி....குடி
குடல் வெந்து செத்து மடி!

கற்றவை கழன்று பெற்றவர் உழன்றிடக் குடி
கைப்பற்றவள் தவிக்க சுற்றங்கள் சபிக்கக் குடி
பற்றுப்பிள்ளை கதிக்க உற்றநட்புகள் கொதிக்கக் குடி
நற்றிறம் பகைக்க நாற்றிசை நகைக்கக் குடி

குடி.....குடி.....குடி
குடல் வெந்து செத்து மடி!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (4-Nov-16, 1:22 pm)
பார்வை : 61

மேலே