எது தீட்டு
எது தீட்டு....????
பூவை பூப்பெய்தால் மாதந்தோறும்
பாளைவிடு நாட்களாய் மாதவிடாய்
பதுமன் படைப்பின் ஆதாரம்
பச்சிளம் பிறப்பின் மூலாதாரம்
அங்கையவள் அயர்ப்பாள் பயிர்ப்பல்ல
பாவையை பயிலல் தீட்டல்ல
இகவாய் மகவை தள்ளி நிறுத்தி
இயற்கையை இழிதல் முறையல்ல
இல்லத்தில் இருக்கும் உறவுகள்
இறைசார்ந்த அர்ச்சனை ஆராதனைகளிலும்
வளர் செடி கொடிகளை நெருங்குவதிலும்
வழக்காய் அவளை விலக்குதல் விதியாமோ
தீட்டு என்ற தீண்டாமைச் சொல்லே
அவசியமில்லா அநாகரீகச் சொல்
கலங்கமாய் காரியங்களில் கழற்றுதல்
மாறிய மனிதத்தின் மடமையன்றோ
இறைமையின் மறுமையே பெண்மை
பெண்மையின் மேன்மையே தாய்மை
தாய்மையின் அஸ்திவாரமே அண்டம்
அண்டத்தின் அழிதலே மாதவிடாய்
ஆய்மகள் தீண்டல் தீட்டென்றால்
அவள் ஆலய அனுமதி தீட்டென்றால்
ஆதியாய் அண்டமாய் ஆரம்பமாகும்
அனைத்துயிர் ஜனனமும் தீட்டே...!
கவிதாயினி அமுதா பொற்கொடி