கலைந்தது கனவு

மூச்சிரைக்க ஓடி
என்னருகில் வந்தாள் அந்த
ஒய்யாரக் காரிகை...!
அவள் தங்க மார்பை தைவருந்
தாரின் திரைதல் நடனம் கண்டு
கரகம் கையேந்திய
தாழ்ச்சடைக் காரரும் சற்று
தடுமாறித்தான் போவர்...!
நான் எம்மாத்திரம்...!

சற்றே தயக்கத்துடன் மலர
எத்தனித்துக் கொண்டிருந்தது
அவளின் இதழ் மொட்டு...

அவள் இதழ் மொட்டு விரிகையில்
என்ன வண்ணத்தில்
வார்த்தைமலர் மலருமோ...?
என்ற பதட்டத்தில்
நொடித்துளிகளை முந்தியடிக்கிறது
என் இதயத் துடிப்பு...!

ஒரு வழியாய்
தயக்கம் தவிர்த்து...
மொட்டு விரித்து...
பூங்காற்றைத் தூதாய்க் கொண்டு
காதல் பூக்களை
பூந்தூறலாய்....
காத்திருந்த என்
இதயத்தில் தூவிவிட்டாள்...!

கனவில்லை என்பதை
மெய்ப்பித்துக்கொள்ள என்
கைகளைக் கிள்ளிப்
பார்த்துக் கொண்டேன்...
வலிக்கத்தான் செய்தது...!

நுனிமலர்ப் பாதங்களால்
நிலத்தைக் கிள்ளி என்
நுதலின் உச்சி முகர்ந்திடவே...
மெல்ல உயரம் கூட்டுகிறாள்...!

என் விழிகள் தாண்டி
அவள் இதழ் பயணித்த
நேரத்தில்தான் உணர்ந்தேன்
பொறுமை உண்மையில்
கடலினும் பெரிதென்று...!

இதையெல்லாம் அவதானித்துக்
கொண்டிருந்த இங்கிதமறியா
பூனையொன்று...
பொறாமையில் போட்டுடைத்தது
பானையொன்று...!

எழுந்த சத்தத்தில்
எழுந்துவிட்டேன் நானும்
ஏக்கத் தொற்றலுடன்...!
கலைந்து போன
என் கனவை எண்ணி...!

கனவில் கிள்ளிய கைகளைத்
தடவிப் பார்த்தேன்...
அங்கே இன்னும்
வலித்துக் கொண்டுதான்
இருந்தது...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (30-Dec-16, 12:20 pm)
Tanglish : kalainthathu kanavu
பார்வை : 122

மேலே