அணில் சொல்லும் அற்புத பாடம்
தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம் என்கிற முகப்புத் தலைப்பில் உள்ள வார்த்தைக்கிணங்கி, பின்வரும் கவிதையை மறுபதிவாக வெளியிடுவதில் தவறொன்றுமில்லை என நினைக்கிறேன்.
============================================================================================
*அணில் சொல்லும் அற்புத பாடம்!*
ஓராயிரம் நெல்லை உரித்தெடுக்குமியந்திரத்தால்
ஒருநெல்லை உடையாமல் உரித்தெடுக்கயுனைப்போல் முடியுமா?
ஒருகையால் சாப்பிடும் மனிதர்களுடன்
இருகையால் சாப்பிடும்நீ யவனுக்கு நண்பனானாய்
உணவுக்காக விட்டுக்கொடுக்க மனமில்லையென்றாலும்
உறவுக்காகக் காக்கையுடன் விளையாட்டுச்சண்டையிடுவாய்!
பறவைக் கூட்டில் முட்டையைத்தேடி
பாம்பொன்று விழுங்கவரும் போது…
நக்கிப் பிழைக்கும் நச்சுப்பாம்பை
நடுங்கும் குரலில் எச்சரிப்பாய்!
பாம்பென்றால் படைநடுங்கு மென்பார்கள்
பயப்படாமல் கிரீச்சிட்டு எதிரியை விரட்டுவாய்!
தூக்கணாங்குருவிக்குத் தூக்கம்வரும்போது
துணைநிற்பாய், கூடுகட்ட நார்கொடுத்துதவுவாய்!
ஆபத்தென்று வரும்போது, அடிபடாமல்தாவுவதை
ஆறறிவுக்கும்கூட அருமையாகக்கற்றுக்கொடுப்பாய்!
வாலின் முடித்தூரிகையைத் தந்துதவி…
வண்ணஓவியங்களுக்கு உயிரூட்டுவாய்!
முதுகு வளைந்து நாணியதாலோ யுனை
முதுகுநாணி இனமென்பார்கள்?
தோலாத தனிவீரன் முதுகிலுனை வருடியதால்…
துணையான தோழனானானாய், மானுடருக்கு…
முதுகில் மூன்று கோடுகளோடு வரம்பெற்று…
முத்திரை பெற்றன்புடன் அணிற்பிள்ளையென
அழைக்கப்பட்டாயோ!
வாயில்லா ஜீவனானாலும்
வாயைசைத்து அரைக்காவிடில்
வாழ்ந்து விடமுடியாதென்று
வாழ்வியல் பாடம் சொன்னாய்!
தாயிழந்த குட்டிக்களைத் தத்தேடுத்து…
தாய்ப்பால் கொடுக்குமரிய உயிரினமாகத் தோன்றி…
பிள்ளையில்லையெனவரம் வேண்டுவோருக்குத்
தத்துப்பிள்ளை உண்டெனஓர் அற்புதவழிசொன்னாய்!
=============================================================================================
படக்கவிதை போட்டியில், சென்ற வாரத்தின் சிறந்த கவிதையாக, எனது கவிதைப் புனைவை வல்லமை என்கிற மின் இதழில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி