பூவிதழ் தேடும் பூ - மரபு கவிதை

பூவிதழைத் தேடுகின்ற
------ பூமகளும் நீயன்றோ ?
தாவியுனைப் பிடித்திடவும்
------ தாமரையே சம்மதமா ?
பாவியுனைத் தேடுகின்றேன்
------ பாதகத்தி வாராயோ !
மேவிடுமே காதலினால்
----- மெல்லியலாள் நடைபயில !


தேடுகின்ற பூவிதழும்
------ தேகமுமே ஒன்றன்றோ !
பாடுகின்ற ராகங்கள்
------ பசுமையானக் காதலினை
நாடுகின்ற வழிச்சொல்லி
------ நல்லறத்தைச் செப்பிடுமே !
ஓடுகின்ற குளத்துநீரும்
------ ஓசையின்றி ரசித்திடுமே !!!


இதழ்களால் புன்னகையும்
------- இனியவளே பூவாகி
இதமானத் தண்ணீரில்
------ ஈங்கின்றே கால்நனைத்துப்
பதமானச் சொற்களினால்
------ பண்கள்நான் பாடிடவும்
விதவிதமாய்க் கனவலைகள்
------- விழிகளிலே வழிந்தோடும் !



பெண்ணிவளின் கைகளிலே
------ பெருமைமிகுத் தாமரைப்பூ
கண்களினால் தீண்டிடவும்
------ காதலினால் நாணத்தால்
விண்ணோக்க மலர்ந்திடுமே
------- விரைந்திடுவேன் பகலவன்போல்
வண்ணமகள் வாய்திறந்தால்
------- வாட்டமது போய்விடுமே !



வாட்டத்தைப் போக்குதற்கு
------- வந்திடுவாய் என்னருகே .
காட்டினிலே இருந்தாலும்
------- கண்மணியே உனைத்தேடி
நீட்டாறு குளத்தருகே
------ நீண்டநேரம் காத்திருப்பேன்
ஏட்டினிலே இடம்பெறுமே
-------- எஞ்ஞான்றும் நம்காதல் !!!!



ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jan-17, 11:16 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 116

மேலே