ஓவியம் - மரபு கவிதை
ஓவியத்தை வரைவோமே ஒற்றுமையைப் பறைசாற்ற
காவியங்கள் படைத்திடுமே கண்ணழகு படங்களுமே !
பாவிகளின் ஓவியங்கள் பலர்நோக்க வைத்திட்டால்
காவிகளின் போலித்தனம் கண்முன்னே தெளிவாகும் !
வரைபடங்கள் சொல்லிடுமே வாழ்வியலின் உண்மையினை
திரைமறைவில் இருப்பதெல்லாம் தீயாகப் பரவிடுமே !
கரைதனிலே நின்றாலும் கடலலையாய் ஓவியங்கள் !
விரைவாக திட்டுகின்ற விந்தைதானே காட்சிகளும் !
தீட்டுகின்ற ஓவியங்கள் திக்கெட்டும் சொல்லுகின்ற
சாட்டையடி உண்மைதனைச் சாற்றிடுவோம் உலகிற்கே
பாட்டெழுதி எடுத்துரைப்பேன் பதில்தேடி நின்றிடுவேன் .
வீட்டினுள்ளே உள்ளவர்க்கும் விடியலாகும் வரைபடமும்!
படங்களுமே செப்புகின்ற பண்பான செய்திதனை
தடங்கலின்றி நாளும்நாம் தப்பாது நிறுத்திடுவோம் .
தடம்புரண்டு போகாது தாபிப்போம் நன்னெறியை .
கடல்போல பொங்கியெழும் கலையுணர்வே ஓவியங்கள் !!!
வண்ணங்கள் துணைகொண்டு வரைகின்ற ஓவியங்கள்
எண்ணங்கள் முழுவதையும் எடுத்தியம்பும் கடவுளன்றோ
மண்ணுலகின் மகிமையினை மனிதர்க்குச் சொல்லுகின்ற
பண்பான படங்களுமே படைத்தவனின் ஊன்றுகோலே !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்