மண்ணில் பிறந்த முத்து

மண்ணில் பிறந்த முத்தே!
மனித குலத்தின் அழியா சொத்தே!

மங்கை, மடந்தை என நாமங்கள் பல சூட்டி
மண்ணிலே வலம் வரும் நீ படுசுட்டி!
ஆணாதிக்க சமூகம் தான்
ஆனாலும் அந்தமும் ஆதியும் நீதான்!

விடியலை எழுப்பும் வித்தை கற்று
வீசிவரும் நீயும் தென்றல் காற்று!
சிவனில் பாதி சக்தி என்று
சிகரம் பல தொட்டாய் பூமியில் இன்று!

வாசல் தெளித்ததெல்லாம் போதும்
வானில் கோலமிடலாம் வா!
அடுக்களை அடைந்தது போதும்
அகிலமும் அடையலாம் வா!

பூகோளத்தை பூப்பந்தாக்கி
பூவையே நீயும் விளையாடு!
விண்மீன்களோடு விளையாட
விரைந்தே நீயும் புறப்படு!

பெண்ணாய் பிறந்த நீயும்
பெருமை சேர்த்தாய் பூமிக்கு!
நித்திரை துறந்து பிள்ளையை காத்து
நிகராய் ஆனாய் சாமிக்கு!

வளையணிந்த வகையறாக்கள் - இன்றோ
வலைதளம் தேடும் வகையானார்கள்!
மட்டம் தட்டும் மாக்களையெல்லாம்
திட்டம் தீட்டிய மக்களாக்கு!

விடியலும் உன் அனுமதி கேட்டு
விண்ணப்பிக்க வழி தேடு!
கதிரவனும் அந்தியில் சாய
கட்டளை அதையும் நீ போடு!

பொறுமை என்னும் ஆயுதம் ஏந்தி
பெருமை அடைகிறாய் நாளும் நீ!
வறுமை வந்து தாக்கிடினும்
சிறுமை நாடா பிறவி நீ!

அணுவும் உண்டோ உன்னிடம் கலகம்
அன்புக்கு நீதான் பல்கலைகழகம்!
அறியாமை இல்லா புது உலகம்
அமைந்திட நீ இது வெற்றி திலகம்!

மனிதகுலம் மண்ணில் தழைக்க
மண்ணோடு போகும் வரை காவல் காக்கும்
மாசற்ற மாணிக்கங்களை
மகிழ்வோடு நாமும் கொண்டாடுவோம்!

எழுதியவர் : தங்கமணிகண்டன் (11-Mar-17, 9:33 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 4172

மேலே