மகளிர் தினம்

கௌரவர்கள் சபையில்
பாஞ்சாலிக்கு பாராட்டா...?
துகில் உரியும் துச்சாதனர்கள்
கிரீடம் தருவாரோ...?
பெண்மையின் அடையாளம்
தன்னலமில்லா தியாகம்!
ஆண்மையின் அடையாளம்
நயவஞ்சக துரோகம்!
தடை உடைத்தோம்!
நடை பயின்றோம்!
சிகரத்தின் உச்சியில்
சீக்கிரமாய் சென்றிட்டோம்!
சரிநிகர் என்று
சத்தமிட்டு சொன்னாலும்
தனக்கு நிகரென்று
ஆண்மனம் சொல்கிறதா!
உடலாய் பார்க்கும்
காமப் பார்வை மறைந்ததா
நேற்றைய நூற்றாண்டு
இல்லக் கிழத்தி என்றது...
இன்றைய நூற்றாண்டோ
பொருளாதாரச் சிலுவை தந்தது.!
குடும்பமொரு முள்கிரீடம்.!
பணி இலக்கோ அறையப்பட்ட ஆணிகள்.!
நித்தமும் நடக்குது
பதினாறுகால அபிஷேகம்!
சாதனை படைத்திட்டோர்
வேதனையை சொல்வதில்லை!
சிறைக்குள் சிக்கியவர்
சிதைந்தாலும் தெரிவதில்லை!
ஒன்றிரண்டை பதம் பார்க்க
பெண்ணுரிமை வாய்ச்சோறா!
பிஞ்சையும் நசுக்கிடவே
அரக்கர் மனம் துணிகிறதே!
கல்லாய் அகலிகைகள்!
வெறும் புல்லாய்
பெண்ணுரிமைச் சட்டங்கள்!
நூறாயிரம் ராவணர்கள் நடுவில்
சீதை தனியாக...
இந்தியாவில் மகளிர்தினம்
இறந்தவர்க்கு செலுத்தும் அஞ்சலி!
மாறட்டும் மாற்றட்டும்!
புதிய பெண்ணுலகு பிறக்கட்டும்!

எழுதியவர் : லட்சுமி (11-Mar-17, 10:48 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 7335

மேலே