சித்திரைப் பாவையே வருக வரங்கள் தருக

சித்திரைப் பாவையே வருக !
வரங்கள் தருக !
கவிதை BY :பூ.சுப்ரமணியன்

எத்திசையும் அமைதி நிலவ
பங்குனித் தாய் பெற்றெடுத்த
சித்திரைப் பாவையே
சிறப்பான சிந்தனைகளை
சுமந்துகொண்டு வருக
முத்தான வரங்கள் தருக !

எல்லாரும் கொண்டாடும்
எங்கள் சித்திரைப் பாவையே
எம்மதம் சம்மதம் – உலகில்
மனிதநேய மிக்க
மக்கள் சமுதாயம்
மலர வரம் தருக !

தன் மக்கள் நலம்
மனதில் கொள்ளாமல்
நாட்டு மக்கள் நலமே
மனதில் கொள்ளும்
அரசியல் தலைவர்கள்
உருவாக வரம் தருக !

பொன் நகை வேண்டாம்
புன்ன(ந)கையே போதும்
பாரதி பாடிய
புதுமைப் பெண்கள்
பெருக வரம் தருக !

புத்தன் ஏசு காந்தி
காட்டிய அன்பு வழியில்
சத்தியமாக நடக்கும்
நல்ல இதயங்கள்
நாட்டில் மலர வரம் தருக !

வரங்கள் தரும்
சித்திரைப் பாவையை
ஐவகை பழங்கள்
வண்ண மலர்களுடன்
நாம் அனைவரும்
வணங்கி வரவேற்போம் !


பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (12-Apr-17, 12:35 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 104

மேலே