சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா-கவியரங்கம்
சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா-கவியரங்கம்
தலைப்பு: தேமதுரத் தமிழோசை
தமிழ்வாழ்த்து
தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தரணியெங்கும் பரப்பிடுவோம்
சேய்போல நமைக்காத்து செல்வந்தனை அளித்திடுதே
ஓய்வின்றி அதைக்காப்போம் ஊற்றான வாழ்வுபெற
காய்போன்ற சொல்கூடக் கனிபோல இனித்திடுதே!
அவையடக்கம் :
அவையோர்க்கு வணக்கத்தை அடியேன்நான் கூறுகிறேன்
சுவைக்கொண்ட கவிதையைநான் சுகமாகக் கூறிடவே.
அவையோர்க ளெல்லோரும் அன்புடனே வழிசெய்வீர்
எவையேனும் பிழையிருப்பின் எனைநீங்கள் பொறுத்தருள்வீர்.
தேமதுரத் தமிழோசை :
தேன்மதுரத் தமிழோசை திக்கெலாம் பரவிடவும்
தமிழதனை தமிழரினம் தரணியிலே தாங்கிடவும்
குன்றாத தமிழ்க்கல்வி குவலயத்தில் தினம்தருவீர்!
எத்தனைநாள் சென்றாலும் செம்மொழியாய்த் திகழ்ந்திடுமே !!
அந்நியர்கள் தமிழ்மொழியை அழித்திடவே விழைந்தாலும்
எந்நாளும் தமிழ்மொழிதான் அமிழ்தமெனத் திகழ்கிறதே.!
கன்னல்சுவை கொண்டுநிதம் கவிஞர்க்கு கவிதையினை
சிறிதுகூடத் தயக்கமின்றிச் சித்திரமாய்த் தருகிறதே!
அந்நியர்கள் சிலரும்தான் கற்றிருந்தார் தமிழ்மொழியை
அதுதானே அவர்களுக்கும் ஊற்றாக அமைந்ததுவே !
அவர்களுந்தான் இயற்றினரே தமிழ்மொழியில் பாக்களையே!
உலகினிலே தோன்றியதில் மூத்தகுடி தமிழ்க்குடியே !!
தமிழ்மொழிதான் இன்றளவும் இளமையாகத் திகழ்கிறது
எம்மொழிகள் வந்தாலும் நம்தமிழுக்கிணை இல்லையடா !
எளிமையான எழுத்துகளால் எண்ணிவியக்க வைக்கிறது
தமிழிசைக்கும் பாக்களினால் தாலாட்ட வைக்கிறதே !!!
இனிமேலே தமிழ்மொழியை
இன்பமாக ஏற்றிடுவோம்
கனிபோல நந்தமிழும்
கச்சிதமாய் இனித்திடுமே!
நன்றியுரை :
நன்றிதனைக் கூறிநாளும் நந்தமிழை வணங்குகிறேன்
கன்னலென நந்தமிழைக் கருத்தினிலே கொண்டேநாம்
என்றும்நன்றிக் கூறிடுவேன் இன்பமான சபையதற்கு
அன்புடனே என்கவிதை அமைதியாகக் கேட்டமைக்கு.
நன்றி வணக்கம்!