மே பதினெட்டு
===============
சர்வாதி காரம் சனநா யகமென்ற
கர்வத்தோ டேதன்னைக் காட்டிய – துர்ப்பாக்
கியத்தையே முள்ளிவாய்க் கால்மன்றில் வீணர்.
நியமித்து நெஞ்சுடைத்த நாள்.
அழிந்த உயிர்பார்த்து ஆசுவாசம் கொண்ட
இழிஞர்கள் வென்றதாய் இன்றில் – மொழிந்ததைக்
கேட்டு மகிழ்வுற்றோர் கேவலத்தின் உச்சத்தைப்
பாட்டாய் இசைத்ததே பார்.
சிந்திய ரத்தமும் சீரழிந்த மக்களும்
நந்திக் கடலோர நிந்தனையும் – தந்திட்ட
பேரவலம் நீங்கா பெருந்துயரம் நெஞ்சத்தின்
ஓரமதில் ஓடும் உயிர்த்து.
நீதியின் கண்களில் நீண்ட நெருப்பெரியும்
பீதியில் இன்னும் பெருங்கவலை – பேதியில்
வீதியில் வாழும் விதிமுடிக்க ஏற்றுகின்ற
சோதியிலும் மாறா துயர்.
மாண்ட இனத்தால் மணிமுடி சூடியே
ஆண்டவர் ஆனவர் ஆட்சியில் – தாண்டவம்
ஆடிய தன்னல ஆதிக்கம் நீங்கிட
பாடிடணு மேபதி னெட்டு
*மெய்யன் நடராஜ்