மனதுக்குள் காதல்

மனதுக்குள் காதல்
விடியலாய் விரிகிற
வானத்திற்கு
வெளிச்சத்தோடு காதல்...
வெளிச்சத்தின்
இறக்கைகளுக்கு
வேகத்தோடு காதல்...
கிளைகளில் இளைப்பாறும்
குயில்களுக்கு இசையோடு
காதல்..
மலையில் விழும்
அருவிகளுக்கு
மண்ணோடு காதல்...
விடைதேடும் மனங்களுக்கோ கேள்விகளோடு காதல்..
தேவைகளின் நிர்பந்தங்களில்
தேடல்களோடு காதல்...
தோற்றுப்போன காதலுக்கு
கனவுகளுடன் காதல்...
தோல்விகளால்
தொடர்கிறது
வெற்றியோடு காதல்...
புசித்து புசித்து சலிப்பதில்லை
புலன்களோடு காதல்...
மரணத்திற்கு மனிதனிடம்
ஒருதலையாய் காதல்....
காலமெல்லாம் மனிதனுக்கு
கவலைகளோடு காதல்...
கடவுளோடு மனிதனுக்கு
தூரத்தில் காதல்...
நிஜங்களை நிராகரித்துவிட்டு
போலிகளோடு காதல்...
புரியும் வரை தொடர்கிறது
பொய்களோடு காதல்...
தனிமையில் நடக்கும்போது
எனக்குள்
என்னோடு காதல்..
இழப்புகளில்
மிச்சங்களாய்
எஞ்சிப் போவதும்
காதல்...
மரணம் வரை பிறக்கிறது
மறுபடியும் மறுபடியும்
மனதுக்குள் காதல்...
நிலாரவி.