​காட்சியும் கவிதையும் - 1

காட்சி :-
கல்லூரி படிப்பை முடித்து பழகிய நண்பர்களைவிட்டுப்
பிரிகின்ற இறுதிநாளன்று கூடியுள்ளவர்களை நோக்கி
மாணவன் ஒருவன் வாசிக்கும் கவிதை இது .
-----------

விடைபெறும் நாளன்று
நடைபெறும் சந்திப்பு !
பிரியப்போகும் நேரத்தில்
உரியதொரு நிகழ்விது ....

அடிபதித்தோம் கல்லூரியில்
அறியாமலே ஒருவருக்கொருவர்
அறிமுகமானோம் நமக்குள்ளே ...
அந்நியம் மறைந்தது
அன்னியோனியம் மலர்ந்தது ..

உணர்வுகளின் பரிமாற்றம்
உள்ளங்களில் உருமாற்றம்
இணைந்த இதயங்களானோம்
இல்லங்களில் பரிச்சயமானோம் !
இணைந்தவர் பிரிகின்றோம்
இனிபயணிக்க பாதைதேடி ....

இரண்டற கலந்திருந்தோம்
இன்பத்திலும் துன்பத்திலும்
எல்லைகளை கடந்திருந்தோம்
சாதிமதக் கோட்பாடின்றி
சுதந்திரமாய் சுற்றித்திரிந்தோம்
சிறகுமுளைத்தப் பறவைகளாய்....

நினைத்ததில்லை வருங்காலத்தை
கணக்கிடவில்லை வரவுசெலவை
எரித்ததில்லை ஏக்கங்களை
மீறியதில்லை வரம்புகளை
கூறியதில்லை குறைகளை
பருவத்தின் பருவநிலையிது ...

சிந்திப்போம் வரும்நாளை
சந்திப்போம் சத்தியமது
நிலைமாறி இருந்தாலும்
திசைமாறி சென்றாலும் !
மனமின்றிப் பிரிகின்றோம்
கனத்த இதயமுடனே
கண்ணீர் சிதறலுடன் ....

கூடியிருந்த பொழுதுகளை
பூட்டிவையுங்கள் நெஞ்சில்
சந்திக்கும் வேளையிலே
திறந்திடுவோம் உள்ளத்தை
பகிர்ந்திடுவோம் நினைவுகளை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Jul-17, 10:02 pm)
பார்வை : 1525

மேலே