நம்நாடு
பண்பு நிறைந்தது நம்நாடு
பரதன் ஆண்ட பொன்னாடு
சாதிகள் எத்தனை இருந்தாலும்
சமத்துவம் நிறைந்த உயர்நாடு
பேதங்கள் என்பது கிடையாது
வேதத்தின் நெறிகள் உடையாது
பலமொழி பேசிட தடையேது
படையெதும் வென்றிட கிடையாது
அண்ணல் காந்தி புத்தரையும்
அன்புள்ள மாமா நேருவையும்
அணுவியல் அறிஞர் கலாமையும்
அகிலத்தில் தந்த திருநாடு
வெள்ளைக் கழுகுகள் இரைதேடி
வேற்று நாட்டினர் உறவாடி
பற்றிச் சென்றனர் பலகோடி
இற்றது நம்நிலை புரையோடி
பரங்கியர் கூட்டம் நடுங்கிடவே
பூலித் தேவன் கட்டபொம்மன்
மருது பாண்டிய மன்னர்கள்
மறத்துடன் எதிர்த்தனர் அந்நாளில்
திருப்பூர் குமரன் கொடிகாத்தார்
தீரன் சின்னமலை தனைஈந்தார்
செக்கினை இழுத்தார் வாஉசி
சிந்தையில் இதனை நீயோசி
தியாகிகள் சேர்ந்து போராடி
தினமும் தாங்கினர் லத்தியடி
அகிம்சை தந்தது அதிரடி
அடைந்தோம் சுதந்திரம் உடனடி
பறந்திடும் மூன்று வண்ணக்கொடி
பாடாய் பட்டவர் எண்ணப்படி
வந்தே மாதரம் சொன்னநொடி
விண்ணே அதிர்ந்திடும் நடுங்கும்படி
செந்நிறம் காட்டும் தியாகமென
சீர்மிகு வெண்மை சுத்தமென
பரவசப் பச்சை வளமெனவும்
பாங்குடன் காட்டும் மணிக்கொடி
ஒற்றுமை ஒன்றே பலமாகும்
ஓங்கிய கைகள் துணையாகும்
தாங்கி பிடித்திடும் தாய்குணமே
தரணியில் தமிழரின் நெறியாகும்
முன்னோர் தியாகத்தை எண்ணிவோம்
முழங்கால் தாழ்த்தி வணங்கிடுவோம்
நாட்டின் பெருமை உயர்ந்திடவே
நாளும் பொழுதும் உழைத்திடுவோம்
பாஸ்கரன்