ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-பகுதி 3

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்-பகுதி 3
-அண்ணாமலை சுகுமாரன்
முதல் பால் —வீட்டுநெறிப் பால்
——————-—————————————
அதிகாரம் ௧ ( 1 ) பிறப்பின் நிலை
============================
ஔவையின் முதல் குறள்
நூல்கள் கற்பதன் பயன் “ஆதியாய் நின்ற அறிவினை ” உணர்வதே என்று கூறித தொடங்கியது
. திருவள்ளுவரின் திருக்குறள் போல் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்பதற்காக பத்துக்குறள்கள் எனப் பரவாமல் பிறப்பின் நிலைஎனும் பொருளுக்கு நேரே அடுத்ததாக எடுத்துச் செல்கிறது .

எதை அறிந்தால் வேறு எதையும் அறியத்தேவை இல்லையோ , பிறகு அந்த பிரம்மஞானமே உலகின் அத்தனை அறிவையும் தந்து விடுமோ ,அத்தகைய ஞானம் முழுவதையும் விரைவில் சூத்திரம் போல் சுருக்கமாக வரிசையாக எடுத்துக் கூற ஆரபித்துவிடுகிறது ஔவையின் குறள்.. இனி ஔவையின் அடுத்தக் குறளைப் பார்ப்போம் .
2 ) பரமாய சக்தியுட் பஞ்சமா பூதத்
தரமாறிற் தோன்றும் பிறப்பு

பரம் = பரம் பொருளிடத்தில்
ஆய = உண்டான
சக்தியுள் = பராசக்தியிலடங்கிய
பஞ்சமாபூதம் = ஐந்து பெரிய பூதங்களும்
தரமாறிடில்= தங்களில் ஒன்றொன்று மாறினால் ,
பிறப்பு – இந்த ஜனனமானது
தோன்றும் = உண்டாகும் .
அனாதினானத் தோற்றமாக விளங்கும் உத்தமமான இப்பிறப்புமான இகம் அல்லது இம்மையும் ,
வரும்பிறப்பான மறுமை அல்லது உம்மையும் ,
முப்பிறப்பான மும்மையும் ,
ஒருபிறப்பான ஒருபவம் ,
எப்பிறப்புமான எம்மை ,
எழுபிறப்பான எழுமை ,
இவை அனைத்தும் பராபவையான பராசக்தியின் அருளால்
நிலம் நீர் ,தீ , காற்று ஆகாயம் ஆகிய பஞ்சமாபூதங்களின் கூட்டால்
பஞ்சீகரணம் என்னும் மாறியக் கூட்டால் இந்த உடல் உண்டாகிறது .

பஞ்சீகரணம் என்றால் எனன என்பதைப் பற்றி நான் முன்பு எழுதிவந்த
‘எனக்குப்புரிந்தது இதுவே ‘ எனும் “மனிதனின் மானுவல் “தொடரில் விரிவாக எழுதிவந்தேன் .
அதுவிரைவில் புத்தகமாகவும் வெளிவர இருக்கிறது எனினும் ஆர்வமுடன் இதைப் படிக்கும் பல புதிய நண்பர்களுக்காக
அவைகளைச் சுருக்கமாக இங்கேயும் தருகிறேன்
இது ” எனக்குப்புரிந்தது இது” வேயின் ஒரு சிறியபகுதி
இதுவரை உலகில் விஞ்ஞான அறிஞர்கள் கண்டது மொத்தம் நூற்றுப் பதினேழு மூலங்கள்(elements); ஆனால்
நம் மெய்ஞான சித்தர்களுக்கோ மொத்தமே எல்லாமே ஐந்துதான் .
ஆகாயம் ,வாயு , நெருப்பு, நீர் , மண்
இவையே பூதங்கள் ஐந்து இவைகளையே மொத்த மூலங்கள் ஐந்துஎனக் கொண்டது சித்தர் அறிவியல் .
இவையே தனித்தும் இணைந்தும் ஆகின்றன உலகப்பொருட்கள் யாவையுமாய் அவைகளே ஆகின்றது அதுவே நமது மேனியுமாகவும் அமைகிறது .
இதையே ஔவையும் பஞ்சமா பூதங்கள் என விவரிக்கிறார் .
பின் அவை ” தரமாறிற்தோன்றும் பிறப்பு ” என்கிறார் .
ஐம்பூத ஆற்றல்களும் பதினைந்து பகுதிகளாக, ஒரு கணக்குடன் பிரிந்து ஆகின்றன இந்த மேனியாக என்று சித்தர்கள் கண்டனர் .

மண்ணின் ஐந்து பாகம் உறுப்புகள் –
மெய் ,வாய் ,கண் ,மூக்கு செவி என ஐந்து ஆகியது .

தண்ணீரின் நான்கு பாகம் – கண்ணில் சுரக்கும்
விழி நீர் , உள்முகமாக சுரக்கும் நிலவமுது ,
சூரிய அமுது , நாத ஜலம் என்னும் உயிரின் ஆற்றல் என ஆகியது .

நெருப்பின் மூன்று கூறுகள் – வலக் கண்ணில்
சூரிய ஒளி, இடக்கண்ணின் சந்திர ஒளி ,
மற்றும் மூலக்கனல் ஆகிய ஜாடராக்கினி என்று ஆகியது .

காற்றின் இரண்டு கூறுகள் – பிராண வாயுவும் ,
அபான வாயுவும் என ஆகியது ஆகாயத்தின் கூறு
தலையில் இருக்கும் துவாதசாந்தப் பெருவெளி என உச்சியில் நின்றது .
இவைகள் மட்டுமா ? நமது உடம்பின் ரத்தம்,தசைகள், தோல், நரம்பு ,கோபம் ,தாபம்,நடத்தல் ,வினையாற்றல் அத்தனையும் ஐம்பூத ஆற்றலே .
இத்தனையும் ஒன்றுடன் ஒன்றுமுறையுடன் இணைந்து ,வேறுவேறு விகிதத்தில்ஆகிறது வெவ்வேறு பொருட்களாக .
இத்தகைய இரசாயன மாற்றத்திற்குப் பெயரே பஞ்சீகரணம் .
இதையே ஔவை “தரமாறிற்தோன்றும் பிறப்பு “என்கிறார்
மண்ணுடன் மண் சேர ஆவது எலும்பு .
மண்ணுடன் நீர் சேர ஆவது தசைகள் .
மண்ணுடன் நெருப்புச் சேர ஆவது தோல் .
மண்ணுடன் வாயு சேர ஆவது நரம்பு .
மண்ணுடன் ஆகாயம் சேர ஆவது ரோமம் .
காற்றுடன் மண் சேர ஆவது உமிழ் நீர் .
காற்றுடன் நீர் சேர ஆவது சிறுநீர் .
காற்றுடன் நெருப்புச் சேர ஆவது வியர்வை .
காற்றுடன் வாயு சேர ஆவது ரத்தம்
காற்றுடன் ஆகாயம் சேர ஆவது சுக்கிலம் /சுரோணிதம் .
நெருப்புடன் மண் சேர ஆவது பசி .
நெருப்புடன் நீர் சேர ஆவது தாகம் .
நெருப்புடன் நெருப்புச் சேர ஆவது நித்திரை .
நெருப்புடன் வாயுச் சேர ஆவது சோம்பல் .
நெருப்புடன் ஆகாயம் சேர ஆவது ஆண்பெண் சங்கமம் .
வாயுவுடன் மண் சேர ஆவது கிடத்தல் .
வாயுவுடன் நீர் சேர ஆவது நடத்தல் .
வாயுவுடன் நெருப்பு சேர ஆவது மடக்கல் .
வாயுவுடன் வாயு சேர ஆவது ஓடுதல் .
வாயுவுடன் ஆகாயம் சேர ஆவது குதித்தல் .
ஆகாயத்தில் மண் சேர ஆவது விருப்பு .
ஆகாயத்தில் நீர் சேர ஆவது வெறுப்பு .
ஆகாயத்தில் நெருப்புச் சேர ஆவது அச்சம் .
ஆகாயத்தில் வாயுச் சேர ஆவது வெட்கம் .
ஆகாயத்தில் ஆகாயம் சேர ஆவது மோகம் .
இதுதான் உடலின் ரசாயனம் !
இப்போது மீண்டும் ஒருமுறை அந்த அர்த்தமுள்ளக் குறளைப் பார்ப்போம் .
பரமாய சக்தியுட் பஞ்சமா பூதத்
தரமாறிற் தோன்றும் பிறப்பு
இந்த இரண்டடியில் எத்தனை பொருள் பொதிந்திருக்கிறது என்பது
வியப்பாக இருக்கிறது அல்லவா ?
சித்தர்களின் அத்தனை ஞானத்தையும் தன இரண்டடிக் குறளில் எத்தனை விளக்கமாகக் கூறியிருக்கிறார்

எழுதியவர் : (6-Sep-17, 2:59 am)
பார்வை : 110

மேலே