தமிழ் வாழ்த்து
உள்ளுணர்வு உவமையற்று,
மொழி மழுங்கி, தளர்ச்சியுற்று,
எதுகை மோனையதும் ஓடி மறைந்து,
சொல்லறிவும் நினைவகன்று,
நாக்குவன்மை பின்னகன்று,
எழுத்தறிவும் எழ மறுத்து,
தமிழன்னை ஆசியது,
அகன்று அறிவிழந்தேனோ என,
அரண்டு நான் அல்லலுடன்,
கனவு நீங்கி கண்விழித்து,
நிலை குலைந்து சிலிர்த்தெழுந்து,
நடுநிசியில் எழுதுகோலை,
எடுத்து நான் புனைந்தெழுத,
கிறுக்கலதில் விறுவிறுக்க,
கவிதையிது புதுப்பொலிவுடன்,
ஜொலித்தெழுந்து புனர்பிறக்க,
தமிழ்த்தாயின் ஆசியது,
மடிந்தாலும் மறவாதேன,
இன்று நான் கண்டறிந்தேன்!
தமிழே எனை வளர்த்த அன்னையே,
சிரம் தாழ்த்தி உனை பணிந்தேன்!