பிரதிபலிப்பு கண்ணீரா பனித்துளியா
காதலனை காணும் வரையில்
காதலி ஒருத்தி காத்திருக்கும்
தருணம் அது..
தன்னவனை மனதில் பதித்தவாறு
ரோஜா பூங்கவனத்தில் கால்தடம்
பதித்தவாறு உலா வந்து கொண்டிருந்த
பொன்னான நிமிடங்கள் அவை...
தன் மனதை கொள்ளை கொண்ட
கள்வனின் மனதை கொள்ளை கொள்வதற்காய் செடிக்கும் எனக்குமுள்ள காதலை பிரித்து
கையில் பறித்து கொண்டாள் பரிசளிப்பதற்காய்...
அவளுடைய நிமிடங்கள் இனிமையான சந்திப்புக்காய் ஏங்கும் வேளையில்
அவனது பாதங்கள் இறுதி பிரியாவிடைக்காய் அவளை நோக்கி விரைந்தன...
அவள் ஆயிரம் வார்த்தைகளால்
அன்பு மாலை சூழ நினைக்கையில்
பிரிந்து விடலாம் என்ற அவனின்
ஒரு
வார்த்தை..அவள் மெளனத்தின் ஆயுள் கைதியாக வழி அமைத்து கொடுத்த தருணம் அது...
வார்த்தைகள் இழந்தவளாய்
விழி வழியே வலி நீராய் பெருக்கெடுக்க
நானோ அன்பளிப்புக்கு தகுதி அற்ற மலராய் தரை மீது வீசப்பட்டேன்...
என் மீதுள்ள துளிகள்..
அவள் வலி கண்டு என் மனதிலும்
ஈரம் கசிய கரைந்த கண்ணீர் துளிகள் தான் அவை...
காலத்தின் கோலத்தில்
காதல்களின் நிறமாற்றங்களை
சிந்தித்தவாறு நான் வீழ்ந்திருக்கையில்
மற்றொரு காதல் கதாநாயகன்
தன்னவளுக்கு பரிசளிப்பதற்காய்
பனித்துளி பட்ட ரோஜா என என்னை பற்றி கொண்டான்..