அப்பாவுக்கு

அப்பா!!!!

என் அழுகையால் நீ உறக்கம் தொலைத்த நாட்கள் எத்தனையோ?

நம் சைக்கிள் பயணம் நெடுகில்
நான் கேட்கும் கேள்விகள் என்றுமே உனக்கு அலுத்ததில்லை...

உன் வண்டிச் சத்தம் உன் மனநிலையை எனக்குச் சொல்லும்
என் கொலுசொலியில் என் மனவோட்டம் நீ அறிந்தாய்

நான் அடம்பிடித்துக் கேட்ட அத்தனைக்கும்
உன் வியர்வையை விலையாக்கி வாங்கித் தந்தாய்....

'அப்பாவின் சாயல் நீ' என ஊரார் சொல்லும்போது
எனக்கெழும் கர்வம் அறிவாயா!!!

என்றேனும் கிட்டும் உன் கைப்பிடி சோறு என் நெஞ்சை நிறைக்கும்..

உன் மார்தந்த உறக்கம்
பட்டு மெத்தை தருவதில்லை..

உன் விரல் பிடித்து படித்த உலகம் ஏனோ
உன் இருப்பைப்போல பாதுகாப்பு தரவில்லை..

உன் குழந்தையுள்ளம் மறைக்க
நீ அணிந்த மீசைமுகம்
எனக்கு பயத்தை தந்ததில்லை..

அம்மாவின் அடிகளை எளிதாக கடந்து செல்லும் என்னால்
உன் ஒற்றைப் பார்வையை மீற முடியவில்லை...

என் மீதான உன் அதிகபட்ச கோபம்கூட
என் நலன் சார்ந்தே இருக்கிறதே!!!

உன் சிரிப்பொலி அறியாத நம் வீட்டை கோபம் கொப்பளிக்கும் பாசத்தால் நிரப்பி விட்டாய்...
இப்போது தான் நான் உன்னை மொழிபெயர்க்கிறேன்...

சொல்ல முடியாத சோகத்தில் உடைந்து நான் அழுதால்
அனிச்சையாய் உன்விரல்
என் தலைகோதும்

அடங்கா மகிழ்ச்சியில் நான் குதித்தால்
கண்டிப்புடன் உன் விழி என்னை ரசிக்கும்

அதிகமாய் பகிர்தல் இல்லாதபோதும்
என் மீதான உன் புரிதல் எப்படி சாத்தியமானது?

உன் விரல்கள் நீக்கி எனக்கு புதுவிரல் புகுத்திவிட்டாய்
ஓரத்தில் கண்டுவிட்டேன் உன் செல்லப் பொறாமையை..

என் ஜனனம் முதல் இன்றுவரை
என் வருகைக்காக பதறித் தவிக்கிறாய்

ஒரு ஒற்றைநாளில் மொத்தமாக பேசி தீர்த்துவிடேன் அப்பா...
உன் நினைவுப்புதையலை நானும் பாதுகாப்பேன்....

போதும் அப்பா!
மிச்சமுள்ள வாழ்க்கையை உனக்கே உனக்காய் வாழ்ந்துவிடு....

எழுதியவர் : (8-Oct-17, 7:21 pm)
Tanglish : appavukku
பார்வை : 1368

மேலே