விடியலைத் தேடும் நதிகள்
விடியலைத்தேடி
மண்ணில் சுரக்கவேண்டிய
நதி
விவசாயி கண்ணில் சுரக்கிறது
இலை நகர்ந்து பச்சையெடுக்க
இவன்
தலை நகரில் பிச்சையெடுக்கிறான்
அரசே
தாவரம் இலை நகர
தலைநகரில் இவனுக்குத்
தா வரம்
அன்று பொன் மகசூலைக் குவித்துக்கொண்டிருந்தான்
இன்றோ தன் மக சூளைக்கூட
நடத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான்
இவன்
எப்பொழுதும் வள்ளலாராகவே
வாழ்ந்துகொண்டிருக்கின்றான்
வாடிய பயிரைக்கண்டு
இவன் உரு
பிடித்து அறுத்துக்கொண்டிருந்த
அரிவாளை இன்று
துரு பிடித்து
அறுத்துக்கொண்டிருக்கின்றது
பள்ளிக்குச் செல்ல அழும்
குழந்தையைப் போல்
இவன் கொள்ளிக்குச் செல்ல
அழுவுகின்றான்
ஆறுகள் எல்லாம்
இவனுக்கு ஆறுதல்
சொல்லக்கூட வருவதில்லை
வருணன் எனப் பெயர்
கொண்டும்கூட
இவன் நதிக்கரைக்கு
வருவதில்லை மழை
பருவமழை பருவம் அடைந்து
மேக வீட்டிற்குள் கிடைக்க
இவன் சோகமடைந்து தாகக் காட்டின்மேல் நடந்தான்
இரவில்
முயல் வந்து விட்டுவைத்ததை
பகலில் புயல் வந்து வெட்டிச் சாய்த்தது
இவன்
எருதை நம்பி
உழைப்பவன்
விருதை நம்பி அல்ல
அன்று
காடு விளைந்தால்
கையும் காலுமாவது மிச்சமிருந்தது
இன்றோ
கயிறும் பாலும்தான் மிச்சம்
முகநூலைப் பார்க்கும் நாம்
அவன் அக நூலைப் பார்ப்பதில்லை
கால்வாய்களெல்லாம்
நதிவற்றி வாய்க்கால்களாய்
அன்று
நாணல் தெரிந்த நதிக்கரையில்
இன்று
கானல் தெரிகின்றது
அன்று
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
இன்று
விதைகள் உறங்குவதால்
விவசாயி உறங்குவதில்லை
முளைத்து நிற்கவேண்டிய விதைகள்
நதியே உன்னால்
இளைத்து நிற்கின்றன
விண்ணோக்கி
மரமாகவேண்டிய விதைகள்
மண்ணோக்கி
உரமாகின்றன
விதைகள்
விவசாயிகளின்
கண்ணீர்க் கவிதைகள்
நீர்வாய்ந்த பூமியில்
புதைக்கப்படும் விதைகள்
சில்லரைப் பணமாகின்றது
சீர் காய்ந்த பூமியில்
விதைக்கப்படும் விதைகள்
கல்லறைப் பிணமாகின்றது
நாடு முழுதும்
போதிமர விதையை விதைத்தாலும்
ஜாதிகள் ஒழியப்போவதில்லை
நதிகள் அணை தாண்டி வழியப்போவதில்லை
அணிகளின் கதவுகள் திறந்துவிட்டன
இன்னும்
அணைகளின் கதவுகள்தான் திறந்தபாடில்லை
விவசாயி கல்லறையில்
நதி வற்றியதால்
என் விதி வற்றியது
நீரின்றி என் விதையும்
அரைஜான் வயிற்றுக்குச் சோறின்றி
என் சதையும் மண்ணுக்குள் உரமானது
சாகுபடி செய்த நான்
சாகும்படி செய்துவிட்டது இயற்கை
இதனைக் கண்டும்கூட
இரு கை நீட்டாது
மௌனம் காக்கிறது அரசின் இருக்கை
கார் பிடிப்பவனின்
கைகளுக்கு
ஏர் பிடிப்பவனின் கைவலி எப்படித் தெரியும் ?
சூரியன் வந்தால்தானே விடியல்
நதிகளை இணைக்காமல்
இரண்டு இலையும்
இரண்டு தலையும்
சூரியனை மறப்பதற்காகவே
போடுகின்றன படையல்
பிறகு நதிகளுக்கு எது இங்கே விடியல் ?
விதை மரமானால்தானே
விண்ணிலிருந்து மழை வரும்
மண்ணுக்குள்ளே மர்மமானால் ?
இரவு நேரம்
அன்று பார்த்த நதியில்
முழு மதி தெரிந்தது
இன்று பார்க்கும் நதியிலோ
பக்கத்துக்கு மாநிலத்தின்
முழு சதி தெரிகிறது
கிஷ்ணா முல்லைக்கு காவிரியே
உங்களைத் தமிழகம் வரத் தடுப்பது யார் ?
அன்னை என்றால் உதைத்துவிட்டு வா
ஆணை என்றால் உதிர்த்துவிட்டு வா
அணை என்றால் அதை
உடைத்துவிட்டு வா
கன்னடம் பிடிப்பதோ
வீண் அடம்
நாங்கள் முப்போகம்
விளைவிக்கக் கேட்கவில்லை
தமிழகத்தில் எதோ சிற்பாகம்
விளைவிக்கக் கேட்கின்றோம்
நாங்கள் கேட்பது
பிச்சை அல்ல
எங்கள் உழவனின் மூச்சை
கன்னடத்திலிருந்து
வருவதில்லை
தண்ணீர்
ஊற்றெடுத்து வருவதோ
இவன் கண் தடத்திலிருந்து
கண்ணீர்
உச்ச நீதிமன்றம்
உரைத்தும்
மிச்ச நீரைக்கூட
அனுப்ப மனமில்லை
எங்கள் வாகனங்களை
அடித்து நொறுக்கும்
அவர்களுக்கு மானமில்லை
ஒன்று மட்டும்
இதிலிருந்து புரிகின்றது
நாம் இந்தியர்கள் இல்லை
தமிழர்கள் என்று
காவிரியே வா
எங்கள் காதலியே வா
வந்து எங்கள் பஞ்சம் குறை
நெஞ்சம் நிறை