நீர்க்கோடுகள் – துரோணா -----------------கதை --படித்தது --
ஸ்டெல்லா நிலைக் கண்ணாடி முன் அமர்ந்து தலை வாரி கொண்டிருந்தாள். சுருள் சுருளாய் உதிர்ந்த முடிக் கற்றைகள் சீப்பில் சிக்கி கொண்டு வந்தன. அவற்றை பார்த்ததும் அவளுக்கு இள வயதில் அடர்த்தியோடு நீண்டிருந்த தன்னுடைய கேசம் ஏக்கத்துடன் ஞாபகத்திற்கு வந்தது. இப்பொழுதெல்லாம் இளவயது நினைவுகள் அடிக்கடி அவளது கவனத்தில் வலியோடு தட்டுப்பட்டு மனதை அதிகமாவே தொந்தரவு செய்கின்றன. அவளது கடந்தகால சந்தோஷங்களுக்கு தாங்க முடியாத கனம் கூடிவிட்டது. குளியலறையின் கதவு திறக்கப்படும் சத்தமும் அதை தொடர்ந்து ஹென்ரி ஈரக்கால்களில் வேகமாய் நடந்துவரும் சத்தமும் கேட்டன.சட்டென்று ஸ்டெல்லாவுக்குள் மிகவும் மோசமான ஒரு வெறுப்புணர்ச்சி பிரவாகமெடுத்து நிறைந்தது. அவள் கண்ணாடியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பிம்பம் பல நூறாக பெருகி ஒன்றன்மீது ஒன்று மோதி உடைந்து சிதறி கண்ணாடியெங்கும் ஒரே ரத்தச் சிவப்பாக மாறியது.
ஹென்ரி தேவாலயத்திற்கு கிளம்பும் பொருட்டு துரிதமாக உடை மாற்றத் தொடங்கினார்.ஸ்டெல்லா அவரை பொருட்படுத்தாது சீப்பில் மாட்டியிருந்த முடி கற்றைகளை பொறுமையாக அவிழ்த்தெடுத்து அவற்றை கை விரலோடு ஒன்றாக சேர்த்து சுருட்டிக் கொண்டிருந்தாள்.
“ஏய்…என்ன? மணி ஆவல…பசங்க ரெண்டு பேரும் சர்ச்சுக்கு கிளம்பி போய் முக்கா மணி நேரம் ஆயிடுச்சு.நீ என்னடான்னா…இப்பதான் ஆடி அசைஞ்சு சிங்காரிச்சிக்கிட்டு இருக்க..”
ஹென்ரியின் குரலை கேட்டதும் அவளுக்கு தன் மனதில் இதுநாள்வரை தேக்கி வைத்திருந்த ஆற்றாமையை அப்பொழுதே முழு வலுக் கொண்டும் தீர்த்திட வேண்டும் என்று தோன்றியது.
“இப்ப சீக்கிரம் போய் மட்டும் என்ன ஆக போகுது? வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் சர்ச்சுக்கு போய் புனித வேஷம் போடுறதுக்கா?” என்று கோபமாய் சொன்னாள்.
ஹென்ரிக்கு சில நொடிகளுக்கு எதுவுமே புரியவில்லை.குழப்பம் கொண்டவராய் “என்னடி உளர்ற?” என்று கேட்டார்.
“ஆமாங்க நான் பேசுறதெல்லாம் உளர்ற மாதிரிதான் இருக்கும். இதே அவ பேசுனா மட்டும் நல்லா பல்ல காமிச்சு இளிக்கலாம்”
“என்னடி அறிவுகெட்டத்தனமா பேசுற. யார்க்கிட்டடி இளிச்சு பேசுனாங்க”
“ஆமாங்க..உங்களுக்கு யாரையுமே தெரியாது. போதுங்க டிராமா போட்டது. மித்ராவுக்கும் உங்களுக்கும் நடுவ என்னதாங்க நடக்குது?”
“ஏய்…வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக்கிட்டிருந்தா நீ இப்போ என்கிட்ட அறைதான் வாங்க போற..”
அதுவரை வலிந்து நிதானமாய் பேசிக் கொண்டிருந்த ஸ்டெல்லாவின் கை கால்கள் ஆத்திரத்தில் நடுங்க ஆரம்பித்தன.அவள் வேகமாய் எழுந்து கட்டில் படுக்கைக்கு அடியிலிருந்து கசங்கிய காகிதத் துண்டு ஒன்றை எடுத்து ஹென்ரியின் முகத்தை பார்த்து தூக்கியெறிந்தாள்.அப்பொழுது அவளது பார்வையில் தென்பட்ட குரோதம் ஹென்ரியை திணற வைத்தது. அவர் அந்த துண்டு காகிதத்தை தரையிலிருந்து எடுத்து பிரித்து பார்த்தார். அது மித்ராவுக்கு வாங்கிக் கொடுத்த புது துணிக்கான பில். முந்தைய தினம்தான் அவர் மித்ராவை புரசைவாக்கம் அழைத்து போயிருந்தார். மறதியாய் பில்லை பர்சுக்குள்ளேயே வைத்துவிட்ட முட்டாள்த்தனத்தை நினைக்கும்போது அவருக்கு எரிச்சலாய் வந்தது. சில கணங்களுக்கு அந்த பில்லையே அவர் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். கோர்வையிழந்து தடைப்பட்டிருந்த அவரது எண்ணவோட்டத்தில் சொற்கள் இடறின.
அவர் பதில் சொல்வதற்குள் ஸ்டெல்லா ஆங்காரம் பொங்கிய விழிகளுடன் “இப்போ இதுக்கு என்னங்க பதில் சொல்ல போறீங்க..ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு அவளுக்கு டிரெஸ் எடுத்து கொடுத்திருக்கீங்க“ என்று கதறலாய் சொன்னாள்.
“நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இஷ்டப்படி பேசாத…அவ பேர்த் டேக்கு சும்மா ஒரு மரியாதைக்காகத்தான் டிரெஸ் எடுத்து கொடுத்தேன்.மத்தபடி வேறெதுவுமே கிடையாது.ஏன்தான் உன் புத்தி இப்படி போகுதோ…அந்த பொண்ணு வயசு என்ன..என் வயசு என்னடி….”
“அதையேதாங்க நானும் கேக்குறேன்.அவ வயசு என்ன உங்க வயசு என்ன. எனக்கொன்னும் புத்தி கெட்டு போகல.நான் எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். எந்நேரமும் அவ கிட்டயே ஃபோன்ல பேசுறீங்க்.நான் வீட்ல இருக்கும்போதே என் கண் முன்னாடியே அவ தோள் மேல கை போடுறீங்க.கை பிடிச்சு தடவுறீங்க.அசிங்கமா இல்ல உங்களுக்கு.?”
“அடச்சீ..வாய மூடுடி நாய..” என்றபடி ஹென்ரி ஸ்டெல்லாவை கன்னத்தோடு சேர்த்து ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டு படுக்கையறையைவிட்டு வெளியே வந்தார். சிவந்த கன்னத்தில் கண்ணீர் தடங்கள் படிய அவள் விசும்பியபடியே படுக்கையில் தன்னை கிடத்திக் கொண்டாள்.
ஹென்ரிக்கு ஒரு மாதிரி மூச்சிறைத்தது. உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பிவிடுவது தான் அவருக்கு நல்லதென்று பட்டது. கையில் பைபிளை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்தவர் திடீரென்று திரும்பி சமையலறை பக்கமாய் நகர்ந்தார். அங்கு மிக்சிக்கு அருகிலிருந்த சிறிய இடுக்கில் தூக்க மாத்திரை அட்டை இருந்தது. அதில் ஒரு மாத்திரையை மட்டும் கத்திரித்து பிரித்து அங்கேயே வைத்துவிட்டு மீந்த அட்டையை தனது கால்சராயுக்குள் நுழைத்துக் கொண்டு அவர் வெளியேறினார்.
புல்லட் முதல் உதையில் பற்றிக் கொள்ள மறுத்தது.இரண்டாவது முறை வெறுப்போடு ஓங்கி உதைக்கவும் “டப்டப்” என்கிற சத்தத்தோடு முறுக்கியது. இந்த புல்லட் அவர் ரொம்பவே ஆசையாய் வாங்கிய வண்டி.பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்த வண்டியை வாங்கிய காலத்தில் புல்லட் வைத்திருப்பதென்பது ஒரு கௌரவம். உடன் அவரது பெரிய ஆகிருதிக்கு புல்லட் எடுப்பாக வேறு இருக்கும். அவர் பார்க்கிற அரசாங்க ஆசிரியர் உத்தியோகமும் புல்லட்டைப் போலவே அவரது கௌரவத்தோடு சம்பந்தப்பட்ட விஷயம்தான். அவரது கொள்ளு தாத்தா தனது குடும்பத்தோடு கிறித்துவ மதத்திற்கு மாறியதிலிருந்து ஆசிரியர் பணியும் அவர்களது பரம்பரையோடு இணைந்துவிட்டது. அவருடைய குடும்பத்தில் பெரும்பாலானோர் ஆசிரியர் வேலைதான் பார்த்தார்கள். அவரது அப்பாவிற்கு சாகிற வரைக்கும் தான் பார்த்த ஆசிரியர் வேலைமீது ஒரு பெருமை இருந்தது.
ஞாயிற்றுக்கிழமையின் காலை சாலைகளில் பரபரப்பற்று மெதுவாய் இயங்கிக் கொண்டிருந்தது.வீட்டில் ஸ்டெல்லாவுடன் ஏற்பட்ட சண்டை பற்றிய ஞாபகம் மெல்ல ஹென்ரியிடமிருந்து விலகியது. அவர் சமநிலை பெற்று நிதானம் அடைந்தார். சமீபமாக ஸ்டெல்லாவுக்கும் அவருக்குமிடையே நிறைய சச்சரவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரையிலும் ஹென்றிக்கும் ஸ்டெல்லாவுக்கும் நடுவே இது போன்ற பிரச்சனைகள் எதுவும் உருவானதேயில்லை. அவர்களது வாழ்க்கையை மிகவும் மோசமான சோகங்கள் பீடித்துக் கொண்டிருந்த காலம் என்றால் அது அவர்களின் மகள் பிளெஸ்ஸி பிறந்ததற்கு பிறகான எட்டு வருடங்கள்தான்.ஆனால் அப்பொழுதும்கூட அவர்களிடையே பலமான புரிதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள நேச உணர்வுமிருந்தன.
பிளஸ்ஸிக்கு பிறவியிலேயே மூளையில் ஏதோ குறைபாடு. மன நிலையில் இயல்பான வளர்ச்சி தோன்றவில்லை. இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பின்னர் பிறந்த பெண் குழந்தை என்பதால் ஹென்ரி அவள் மீது அதிகமான பாசம் வைத்திருந்தார். அதனாலயே அந்த பிள்ளையை எத்தனையோ மருத்துவமனைகளுக்கு தூக்கிக் கொண்டு போய் வைத்தியம் பார்த்தார். இருந்தும் பிளஸ்ஸியை தொடர்ச்சியாக கொடுமையான சுகக்கேடுகள் தாக்கிக் கொண்டே இருந்தன. பலஹீனமான அவளுடல் தன் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக இழந்து துவண்டு கொண்டுவருவது அவருக்கு மிகவும் தெளிவாக தெரிந்தது. அவள் வேதனையில் சிதைவுற்றுக் கொண்டே வந்தாள்.இறுதியில், குழந்தைகள் ஒதுக்கி தள்ளிய பாகங்கள் பழுதடைந்த பிளாஸ்டிக் பொம்மை போலான அவள் ஒரு நாள் காலை மூத்திரத்தில் நனைந்த படுக்கையில் குளிர்ந்து விறைந்த உடலோடு பிணமாக கிடந்தாள். அந்த துயரத்திலிருந்து ஹென்ரியையும் ஸ்டெல்லாவையும் மீட்டுக் கொண்டுவந்தது அவர்கள் இருவருக்குமிடையில் இருந்த அன்புதான்.
இப்பொழுது அந்த அன்பும் கரிசனமும் எங்கே போயின? இருவருக்குள்ளும் தற்சமயம் மிச்சமிருப்பது ஒருத்தரை ஒருத்தர் கொன்று கொள்ள துடிக்க வன்மம் மட்டும் தானே. இந்த நிலை உண்டாக மித்ராவே முழுக் காரணம் என்பது இருவருக்குமே தெரிந்தேயிருந்தது.
மித்ரா ஹென்ரியின் மாணவி. அவர் வேலை செய்துக் கொண்டிருக்கும் பள்ளியிலிருந்து இந்த வருடம்தான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து வெளியேறியிருக்கிறாள்.
ஹென்ரி எப்பொழுதுமே தன் வகுப்பு மாணவர்களுடன் தோழமையான உறவுடனே இருப்பார்.ஆரம்பத்தில் மித்ராவுடன் பழகியதும் பிறகு அவளை வீடுவரை அனுமதித்ததும் மிகவும் இயல்பாக நிகழ்ந்தது அந்த வகையில்தான். அதற்கு அப்புறம் பிற எல்லோரிடத்திலிருந்தும் மித்ரா தனித்த தெரிய தொடங்கினாள். பின்னர் அவர் தொட்ட நினைவுகள் மீதெல்லாம் எப்படியோ மித்ராவின் வாசமும் ஏறத் தொடங்கி விட்டது.இந்த உறவின் ஒவ்வொரு நிலைப் படியையும் ஹென்ரி கவனித்து கொண்டேதான் வருகிறார். எந்த பிசிறும் இன்றி தீர்மாணமான கதியில் அது வளர்ந்துக் கொண்டேயிருக்கிறது.அவரோடு சேர்ந்து ஸ்டெல்லாவும் அதை கவனித்து கொண்டிருக்க வேண்டும். ஸ்டெல்லா அளவுக்கு ஹென்ரியை வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.இருபது வருட மண வாழ்க்கையில் ஸ்டெல்லா ஹென்ரியை மிகவும் சரியாக கணித்து வைத்திருந்தாள். இது ஹென்ரிக்கும் நன்றாகவே தெரியும்.இருந்தும் திரும்ப திரும்ப பொய்கள்.நாடகங்கள். மறைக்க முடியாத உண்மையிலிருந்து தள்ளி தூரம் போகலாம் என்கிற எண்ணத்தில் ஹென்ரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்-அது சாத்தியமே இல்லை என்பது தெரிந்தும். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் மித்ரா கவனிக்கிறாளா என்பது அவருக்கு தெரியவில்லை. எப்பொழுதுமே மித்ராவை அவரால் கச்சிதமாக அளவிட முடிந்ததில்லை.
மித்ரா மிகவும் சுதந்திரமானவள்.அவள் தன்னுடன் எந்த நினைப்பில் பழகுகிறாள் என்று அவர் யோசித்து குழம்பாத நாட்களேயில்லை. அவள் பக்கத்தில் இருக்கும்போது அவளது தூய்மையான ஸ்பரிசத்தின் ஒவ்வொரு இழையும் அவரை அவ்வளவு தூரத்திற்கு கஷ்டப்படுத்துகிறது.அக்கணங்களில் உடைந்து தகர்வதும் பின் பிரம்மாண்டமாய் உயிர் கொள்வதுமென ஒரே தத்தளிப்பாக இருக்கும் அவருக்கு. அப்படியே பேச்சுவாக்கில் அவளது கையை பற்றி தனக்கு கைகளுக்குள் வைத்துக் கொள்வார். முதல் முறை அவளது கையை பிடித்தப்போது இவருக்குள் வகை காணமுடியாத தெளிவற்ற உணர்ச்சிகள் நெருப்பாய் கொதித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவளது முகத்தில் எந்த சலனமும் இல்லை. இப்பொழுதெல்லாம் அவளாகவே எனது கையை பிடித்துக் கொள்ளுங்கள் என்பது மாதிரி அவர் முன்னே கை நீட்டி சிரிக்கிறாள். அது இளவரசிகளுக்கே உரிய தோரணை. அந்த நேரங்களில் அவளிடமிருந்து வெளிப்படும் நாடகத்தனம் கூடிய பாவனை அவரை கடலின் பேரலைகளுக்குள் சிக்கி மூழ்க வைத்துவிடும்.
குளிர்ந்து லேசான காற்றில் ஈர வாடை கசிந்து வந்தது. ஹென்ரி தலை தூக்கி வானத்தை பார்த்தார். இருண்ட மேகக்கூட்டங்கள் ஒற்றை நிழலென இணைந்து முன்னேறிக் கொண்டிருந்தன. எங்கிருந்தோ மெழுகுவர்த்தியின் கருத்த புகை வாசம் வெளியேறி அவரது நாசியை தொட்டது. மனம் எடையிழக்க உள்ளுக்குள் குற்றவுணர்ச்சி ததும்பியது. தான் யோசிப்பது எல்லாம் சரிதானா? ஸ்டெல்லாவின் கண்ணீருக்கு என்ன பதிலுரைப்பது? என்று அவரது மூளைக்குள் நிறைய கேள்விகள் படர்ந்து நரம்புகளை கவ்வியிழுத்தன. ஸ்டெல்லாவின் முகமும் மித்ராவின் முகமும் ஒரே கோட்டில் இணையுருவாய் தென்பட இருவரும் பார்ப்பதற்கு அம்மாவையும் மகளையும் போல் காட்சி தந்தார்கள்.அவருக்கு பயங்கர அவமானமாய் இருந்தது.
அப்பொழுது வள்ளென்று என்று தீனமாய் குரைத்தப்படி ரோகம் பிடித்த கருத்த நாயொன்று வண்டியின் குறுக்காய் பாய்ந்து சாலையை கடந்தது. பிரேக் அடித்த வேகத்தில் டயர்கள் மண்ணோடு வேகமாய் உராய்ந்து “விருக்”கென்று ஒலியெழுப்பி நின்றன. அந்த நாய் ஒடுங்கியபடி நின்று இவரை ஒரு நொடி பரிதாபமாக பார்த்துவிட்டு ஓடி மறைந்து விட்டது.
நாய் உண்டு பண்ணிய சத்தத்தை கேட்டு பயந்து போன ஒரு சிறிய பெண் சாலையின் எதிர்புறத்தில் உடல் விதிர்க்க நின்றிருந்தாள். அவளை பார்த்ததும் இவருக்கு பிளெஸ்ஸியின் ஞாபகம் வந்தது. உதட்டிற்கு மேல் திட்டு திட்டாய் இரத்தம் உறைந்து காய்ந்து போயிருக்க பிளெஸ்ஸி சவமாய் கிடந்த காட்சி மனதில் வெட்டியது.சடுதியில் அவரது குரல் விம்மியடைத்து தொண்டையை விட்டு வெளியேற முடியாத கேவல்கள் இதயத்திற்குள்ளாகவே ஓங்கரித்து துடித்தன. அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு புல்லட்டை வேகமாய் இயக்கினார்.
தேவாலயத்தின் முகப்பு தொலைவில் வரும்போதே தெரிந்தது. ஹென்ரி வண்டியை ஓரமாய் நிறுத்துவிட்டு தேவாலயத்திற்குள் நுழைந்தார். உள்ளே பாதிரியின் பிரசங்கம் கேட்டது.
“தேவனின் விசுவாசிகளாகிய நீங்கள் தீயக் காரியங்கள் உங்களை சூழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்களாக..”
முன்னே கொயருக்கு அருகே ஹென்ரியின் பையன்கள் இருவரும் கீபோர்ட் கிதார் சகிதம் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களை தொட்டு கடந்த ஹென்ரியின் பார்வை சிலுவையில் அறையப்பட்ட கிறுஸ்துவின் பக்கம் வந்தது. மாம்சமும் ரத்தமுமான உடலில் பரிசுத்தம் எங்கே இருக்கிறது? கனிந்து குருதி உகுக்கும் தேவக்குமாரனின் கண்களில் கவிந்திருந்த இருள் ஆதி மனதின் திரிபடாத ஆழங்கள் எங்கும் நீண்டது. அவருக்கு எதை ஏற்பது எதை மறுதலிப்பது என்றே புரியவில்லை.
அலைபேசி அதிர்வுகளோடு அவரது கால் சராயுக்குள் நகர்ந்தது. கண்களை யாரும் பார்க்காத வண்ணம் துடைத்தப்படி தேவாலயத்தை விட்டு வெளியே வந்து அலைபேசியை எடுத்து அவர் பேசினார்.எதிர்முனையில் மித்ரா.
“சார்…”
“சொல்லுமா”
“ஒரு விஷயம் சொல்லவா…”
“ஹீம்.சொல்லு”
“எப்பவும் என்னைய கேட்டிட்டே இருப்பீங்கள்ல யாரையாவது லவ் பண்றியான்னு. ஒரு உண்மைய சொல்லவா. நான் கௌதமை லவ் பண்றேன் சார். இப்பதான் அவன்கிட்ட ஒ.கே சொன்னே. அதுக்கப்புறம் முதல்ல உங்கக்கிட்டதான் சொல்றேன்.”
“இப்போ சர்ச்சுக்கு வந்திருக்கேன். நானே உன்ன அப்புறம் கூப்பிடுறேன்.”
ஒவ்வொரு துளியாய் உருண்டு கனத்து தரையில் மோதி தெறித்து விழ மழை வெளியே பலமாய் பிடித்துக் கொண்டது.