ஒலியும் ஒளியும்
இருள். அடர்ந்த இருள்.
நிலவு கூட கண்கள் மூடி மேகத்தில் ஒளிந்து கொள்ளும் கரிய இருட்டு . காற்றின் அளவும் சற்று அதிகமாக இருந்தது. ஆதலால் சன்னல் கதவுகள் சற்று படபடத்தன, அவனது இதயத்தை போலவே.
அவனது தனிமையும் அந்த இரவும் அவனுக்கு பயத்தை ஏற்படுத்தியது. பெரும்பாடு பட்டு தூங்க முயற்சித்தாலும் வெளியில் நாய்களின் குறைப்பு மட்டுமல்ல அவன் மனைவியின் நினைவும் சேர்ந்து தான் அவனது தூக்கத்தை கெடுத்தது.
அவள் ஏன் இன்று ஊருக்கு செல்லவேண்டும், தனிமையை துரத்த நான் ஏன் அந்த பேய் படத்தை பார்க்க வேண்டும், இப்போது இப்படி தூக்கம் வராமல் தவிக்க வேண்டும் என்று நினைவுகளில் மூழ்கி உறங்க முயற்சித்தவனின் உறக்கத்தை கலைத்தது அந்த சப்தம்.
என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோதுதான் நாய்களின் குறைப்பு அடங்கி, கற்றின் படபடப்பும் குறைந்து நிசப்தமாய் சூழல் இருப்பதை உணர்ந்தான். நிசப்தம் சப்தத்தை விட கொடியது. அதே சமயத்தில் மின்சாரமும் துண்டிக்கப் பட்டது.
பயம் அவனுக்கு அதிகரித்தது. அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். மூடிய கண்களுக்குள் சிறிய தீ ஜுவாலை தெரிந்தது. பேய் ஏதும் வந்து விட்டதோ என்று யோசித்தான். எல்லாம் நம் மன பிரம்மை என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பயத்துடனே கண்களை மேலும் இறுக்கி மூடிக் கொண்டான்.
ஜுவாலை சிறிது சிறிதாக பெரிதாவதுபோல் ஒரு எண்ணம் தோன்ற போர்வை விளக்கி பார்க்கலாம் என்றால் பயம் வேறு தடுத்தது. கடவுளை பிராத்தித்து கொண்டும் தன் மனைவியை திட்டிக்கொண்டும் இருந்தான்.
சிறிது நேரத்தில் அவன் காதருகே உஷ்ண காற்றை உணர்ந்தான். அவன் இதய துடிப்பு அதிகரித்து மூர்ச்சை அற்று போகும் முன் அவன் காதில் கேட்டது அந்த தேவதையின் கானமொழி " என் இனிய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று.
- மகிழ்ச்சி -