உன் குரல் கேட்டால்

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-11-17
நன்றி:: கூகிள் இமேஜ்

====================
உன் குரல் கேட்டால்..!
====================

அத்தானென அழகாயுன்குரல் கேட்டால் போதும்..
..........அன்பின் உச்சத்துக்கு அச்சொல்லே பிரதானமாகும்.!
முத்தான கனிச்சொல் பலவுண்டாம் தாய்மொழியில்..
..........முத்தமிழில் “என்அத்தான்” எனும்சொல் இனிக்கும்.!
இத்துணையினால் பெறும் பேரின்பக் கிளர்ச்சியே..
..........இயக்கும்நம் பெரும்சக்திக்கு ஈடாகும் பாலமாகும்.!
எத்தனை போராட்டங்கள் புவியில்பல நடந்தாலும்..
..........இத்“தஞ்சம்” எனும்முடிவு காதலிலே மட்டுமெழும்.!

காதல் இயல்பாக எழவேண்டுமதில் எப்போதுமே..
..........கனலிருக்கும்!உரசிக்கொண்டால் பற்றிக் கொள்ளும்.!
மோதலென்பது காதலில் வந்தாலது முற்றியவுடன்..
..........முடிவில் சரணாகதி என்பதேயதன் தத்துவமாகும்.!
காதலியே!“காதலிக்கிறேன்”எனஉன்குரல் கேட்டால்..
..........காலத்திற்கும் அடிமையாவது காதலின் பண்பாகும்.!
காதல் கைகூடாமல் மாந்தரழிந்தாலும் இவ்வுலகில்..
..........காலத்தால் அழியாதென்பது உண்மைக் காதலாகும்.!

கவர்ச்சியென்பது காதலுக்கு முக்கிய இலக்கணமாம்..
..........காணும் பார்வையாலே யாவரையும் கவர்ந்திழுக்கும்.!
கவண்கல்போல் வைத்தகுறி நோக்கி விரைந்துசெலும்..
..........கருவிழிகள் காதல்வயப்பட்டவரை சுண்டி இழுக்கும்.!
அவசரத்தில் அரும்புகின்ற காதல்முதலில் இனிக்கும்..
..........அவகாசத்தில்......அடிநாக்கிலதுவே பின்பு கசக்கும்.!
விவரமாகக் காதல்செய்யத் தெரியவேண்டும் அதில்..
..........விழிப்புடன் இருந்தால் மட்டுமேயது கைகூடிவரும்.!

இருந்துபோதல் என்பதே இம்மனித வாழ்க்கையாம்..
..........இன்பக்காதல் இல்லையேல் வாழ்வென்பது சுமையாம்.!
ஒருமித்த காதலுக்கு உண்மையன்பு பாசம்வேண்டும்..
..........உறவைச் செழிப்பாக்கும் உரமாவது காதலுணர்வாகும்.!
ஒருஉயிர்பிறக்க ஈருயிர் வேண்டுமென்பது விதியாகும்..
..........ஈருறவில் காதல்விதி மாற்றமிருந்தால் பிறவியேது.!
உருவாகும் உன்னதக் காதலிலெழும் எண்ணங்களை..
..........உரையாக்க....உன்குரல் கேட்டால்தான் அதுமுடியும்.!

=====================================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (24-Nov-17, 5:43 pm)
பார்வை : 105

மேலே