இன்றைய நமது சமூகத்தில்-------------------நாம் படிக்க வேண்டிய புத்தகம் Genes, Peoples and Languages ----ஆசிரியர் Luigi Luca Cavalli-Sforza
ஞானசேகர்
தீட்டென்பவனை
???? கழற்றி
அவன் வாயில் அடி.
நினைவிற்கு வரட்டும்
அவன் பிறப்பு.
– திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் + தயா கவிசிற்பி (என இணையத்தில் படித்தேன்)
யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதான்
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தான்
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே வாசல் ஓரே கூடு ஓரே ஆவி
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பேசும் மொழி, தோல் நிறம், உடை, உணவு, கண் / மயிர் / முகம் / உடல் அமைப்பு, பொதுவான கடவுள் / எதிரி, வாழும் முறை / நிலம் / காலநிலை என பல காரணிகளின் அடிப்படையில் மனிதன் என்ற விலங்கினம், பல இனங்களை உண்டாக்கி வைத்திருக்கிறது. தனது இனம்தான் மற்ற எல்லா இனங்களைவிட தலை சிறந்தது என ஒவ்வோர் இனமும் நம்புகிறது. தனது இனத்திற்கு என சில தனிப்பட்ட சிறப்புகள் தலைமுறை தலைமுறைகளாக தனது மூதாதையர்கள் மூலம் சந்ததிகளைச் சேர்வதாக பெரும்பாலான இனங்கள் நம்புகின்றன. தன் இனம் மட்டும்தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட இனம் என சில இனங்கள் சொல்கின்றன. தன் இனம் மற்ற இனங்களை எல்லாம் ஆள்வதற்காகவே படைக்கப்பட்ட இனம் என சில இனங்கள் நிரூபிக்கின்றன. ஒவ்வோர் இனத்திற்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மற்ற இனங்களுக்குப் பாதமான தனக்கு மட்டுமே சாதகமான தனது நம்பிக்கைகளை மற்ற இனங்கள் மீது திணிக்கும் போதுதான் பிரச்சனைகள் எழுகின்றன. உதாரணமாக பசுமாட்டைச் சிறந்தது என ஓர் இனம் நம்புவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை; பக்கத்து இனமும் அவர்களது பசுமாட்டைச் சிறந்தது என நம்ப வேண்டும் எனத் திணிப்பதில் தான் பிரச்சனை.
கடவுளால் சுடப்பட்ட சப்பாத்திகள் மூன்றுவகை. பாதி வேகாமல் வெளிரியவர்கள் பிரிட்டிஷ். அதிகம் வெந்து கருத்தவர்கள் ஆப்பிரிக்கர். சரியாக சமைக்கப்பட்டவர்கள் இந்தியர். இப்படியொரு உதாரணம் நம்மில் பலருக்கும் சொல்லப்பட்டிருக்கலாம். யார் இதை முதலில் சொன்னதென்று தெரியவில்லை. இதைப் பிரபலமாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன். பிரிட்டிஷைக் கீழ்த்தள்ளி இந்தியரை மேலுயர்த்த ஆப்பிரிக்கரைப் பழிப்பதில் ஏது நீதி? பண்டைய காலத்தில் இந்தியா வந்த ஒரு மேற்கத்திய பயணி (மார்கோ போலோ / மெகஸ்தனீஸ்), இந்தியர்கள் நன்றி (thanks) சொல்வதில்லை எனத் தன் நாட்டில் சொல்கிறார். அங்கு தொடர்பே இல்லாமல் அடிக்கடி excuse me, sorry சொல்கிறார்கள் என நாமும் குறை சொல்லலாம். மெக்சிகோ மற்றும் சில கேரள மக்களின் ஆங்கில உச்சரிப்பைப் பெரும்பாலானோர் கிண்டல் செய்வதுண்டு.
சக மனிதனை இனம் பிரித்து தொன்றுதொட்டு தன்னைவிட தாழ்ந்த நிலையில் வைத்துப் பார்க்க பழகிப் போன நமது வாழ்க்கை முறையைப் பழமொழிகள் சொல்லும்:
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
ஆட்டுக்கும் அளந்துதான் வெச்சான் ஆண்டவன் கொம்பை.
நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வெச்சாலும் கம்பத்தப் பாத்தா காலத்தான் தூக்கும்.
வண்ணாத்தி மூத்தரம் ஆத்தோட போனா என்னா கொளத்தோட போனா என்னா?
குலவித்தை கல்லாமற் பாகம்படும்.
பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்யில் அரைவாசியாகாது.
ஆசாரி செஞ்ச ஆக்கினைக்கு ராசாதி ராசனானாலும் தல குனிஞ்சுதான் போகணும்.
இவற்றின் தொடர்ச்சியாக புதுக்கவிதைகள் மாதிரி புதுமொழிகள் சில:
எக்குலமும் வாழணும், முக்குலம்தான் ஆளணும்.
கடவுளைக் கண்டவரும் இல்லை, கள்ளனை வென்றவரும் இல்லை.
நாடு பாதி, நாடார் பாதி.
பத்து பைசா முறுக்கு, பள்ளி வாசல நொறுக்கு.
செவப்பா இருக்றவன் பொய் சொல்ல மாட்டான்டா.
இப்படி காலங்காலமாக இன்றளவும் சக மனிதன் மேல் கொடூரமான வன்முறைகளாக வரலாற்றாளர்கள் சொல்லும் அடக்குமுறைகளில் முதலாவது, நிறம் மூலம் இனம் பிரித்த அமெரிக்கா; இரண்டாவது சாதி என்ற மாயக் கோட்பாட்டின் மூலம் இனம் பிரித்த இந்தியா! அறிவுடைய மாந்தரும் கற்புடைய மாதரும் இன்னின்ன குலத்தில் தான் பிறக்க வேண்டும் என்கிறது சாதியம். இன்று மதவாதிகள் தேசிய நூலாக சித்தரிக்கும் பகவத் கீதையில், ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ என்று கிருட்டிணர் சொல்கிறார். அதாவது ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’. அந்த நான்கு அடிப்படை சாதிகள் பல்கிப் பெருகி இன்று எண்ண முடியாத அளவிற்கு வந்து நிற்கின்றன. அதில் மனிதயினத்தில் சரிபாதியான பெண்ணினத்தின் நிலை பற்றி நான் சொல்லித் தெரிய தேவையில்லை. ‘தனது தந்தையின் கடனைத் தீர்க்காத ஆண்மகன், மறுபிறவியில் நாயாகவோ அடிமையாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கிறான்’ என்று சாதிகளைச் சட்டமாக்கிய மனுதர்மம் சொல்கிறது. பொண்ணுக்குப் பத்து வயசான்னா பறையன் கையிலாவது பிடித்துக் கொடு என, கடவுளின் சொந்த நாடான கேரளாவில் ஒரு சொல்லாடலே உண்டு.
சிகந்தர் ஆட்சியில் 15ம் நூற்றாண்டில் முதன்முதலில் இந்து – முஸ்லீம் வன்முறைகள் கஷ்மீரில் நடந்தன. இரு பத்தாண்டுகள் கழித்து 11 இந்து குடும்பங்கள் மட்டும் தான் கஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் நிலைத்து நின்றன. அவர்களுக்குள்ளாகவே ஒரு சாதியை உண்டாக்கினர். கஷ்மீரிலேயே தங்கியவர்கள் மலமாசி. கஷ்மீரைவிட்டு வெளியேறியவர்கள் பலமாசி. பட் ஷா என்ற இஸ்லாமிய மன்னன் வெளியேறிய இந்துக்களை எல்லாம் மீண்டும் அழைத்து அரசுப் பதவிகள் அளித்தான். அரசுப் பதவி வகிக்கும் இந்துக்களுக்கு இடையே இன்னொரு சாதியை உண்டாக்கினர். பெர்சிய மொழி பேசத் தெரிந்தவர்கள் கர்கும். அது தெரியாதவர்கள் பாச்சி பட். அவர்களுக்கு இடையே பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள் என்பது அடுத்த விடயம். அடுத்த சாதியர் கைப்பட்ட தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள் என்கிறது கஷ்மீர் வரலாறு. ஒரு ‘ப்’பில் இனங்காணும் நாகபதனி, நாகப்பதனி சாதிகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சாதி மூலம் இனங்காணுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்று ஏற்கனவே சொல்லப்பட்ட கோடி உதாரணங்களில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதைவிட அபத்தம், இந்தியா என்பது ஒரு காலத்தில் இந்துவாய் இருந்த ஒரே இனம் என மதவாதிகள் கூறுவது. ஆரிய இனம்தான் சிறந்தது என்று என்றோ ஆர்தர் டீ கோபின்னவ் சொல்லிப் போனது, பின்னாளில் ஹிட்லர் மூலம் யூதர்களைக் கொன்று குவித்தது. மதச்சாயம் பூசி கோபின்னவ்கள் அதிகம் வலம்வரும் இன்றைய நமது சமூகத்தில் ஹிட்லர்களைத் தவிர்க்க இதோ ஓர் அறிவுச் சாயம் பூசிய இன்னொரு புத்தகம்!——————————————————————————————————————————————————————————————–
புத்தகம்: Genes, Peoples and Languages
ஆசிரியர்: Luigi Luca Cavalli-Sforza
வெளியீடு: Penguin
——————————————————————————————————————————————————————————————–