குருதிக் குடிசை

வேண்டாமென்பதை
வேண்டுமென்று
வேண்டுமென்றே
அடம்பிடிக்கும் !

வேண்டியதை
வேண்டாதோர் தரின்
வேண்டாமென்று
முகம் திருப்பும் !

புரிந்து கொண்டதாய்
நாம் புரிந்து கொண்டதை
புரிந்து கொண்டு நகைக்கும்
நம் புரியாமை கண்டு !

தவறென எண்ணும்
தவறான தவறுகளை
சரியென எண்ணும்,
தவறிய சரிகளை
இனம்கண்டு சேர்க்கும்
தவறாமல் தவறோடு !

உண்மைகள் அறிந்தும்
வாயடக்கி சிரிக்கும்
பொய்யெனத் தெரிந்தும்
மௌனம் உடுத்தும்
சரி தவறுகளின்
ஒன்றில் மற்றொன்றை
தருவிக்க வல்லது !

கபாலத் தொட்டியில்
மிதக்கும் கொழுப்புக் கப்பல்
சரியென கற்பிக்கப்பட்டதை
கவ்விக் கொள்ளும்,
குருதியருவிக்கு
ஆசானும் அதுவே !

எது பெரிதென
சந்தேகம் வேண்டாம்,
உச்சியில் இருப்பதாலேயே
உச்சிமுகர்ந்திட தேவையில்லை
எதையும் எதற்கும் எப்போதும் !

எண்திசை மட்டும்தான்
உண்டென சாதிக்கும்
கருஞ்செடி வேர்க்கிழங்கு,
இருந்தது இருந்தபடி
மருந்துக்கும் அச்சமின்றி
மேலேறிப் பறக்கும்
குருதிக் குடிசை !

நாடியைச் சுற்றி ஆடிவரும்
மனவோசையை மகுடியென
உருவகித்து நாகமென
அடங்குகங்கள் - மகுடி விடம்
உடம்பெல்லாம் ஏறும் வரை !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (7-Dec-17, 5:01 pm)
Tanglish : kuruthik kudisai
பார்வை : 551

மேலே